2013-09-05 17:01:38

கற்றனைத்தூறும் ... மழைக்காலத்தில் நோய்களைத் தடுக்க...


பருவ காலங்கள் எதுவானாலும் நுண்கிருமிகள், வைரஸ், பூஞ்சை, பாரசைட் போன்றவைதான் நோய்களைப் பரப்புவதில் முக்கிய காரணங்களாக உள்ளன. அதிலும் மழைக்காலத்தில், சாதாரண சளியில் தொடங்கி, மூக்கடைப்பு, இருமல், காய்ச்சல் எனப் பல்வேறு நோய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றித் தாக்குகின்றன. இவற்றைத் தவிர்க்க, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியில் கவனம் வேண்டும். உடலில் நோய் எதிர்ப்புக் குறையும்போதுதான், தொற்றுக் கிருமிகளுக்கு நம் உடல் வரவேற்பு சொல்லும்.
மழைக் காலத்தில் வீட்டுக்குள்ளும், வெளியேயும் நீர் தேங்காதவண்ணம் பார்த்துக்கொண்டால் கொசுக்களால் பரவும் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலைத் தவிர்க்கலாம்.
மழைநீர்ப் பெருக்கத்தில், குடிநீர்க் குழாய்களில் கழிவுநீர் கலந்துவிடுவது சாதாரணமாக நடக்கும். அதனால் வீட்டைச் சுற்றி அசுத்தம் அதிகமாகும் நாள்களில் ப்ளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம்.
வீட்டுக்குள்ளே துணி மூட்டைகள் மற்றும் சுத்தமில்லாத இடங்களில், கொசுக்கள் அதிகம் அடைக்கலமாகும். திரைச்சீலைகளையும், அலங்கார விரிப்புகளையும்கூட மழைக் காலத்துக்கான கூடுதல் கவனிப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.
குழந்தை முதல் பெரியவர்வரை கொசுத் தொந்தரவு இல்லாத உறக்கத்துக்கு கொசுவலைதான் சிறந்தது. இதுதான் பிற்காலத்திய மூச்சுத் தொடர்பான பக்கவிளைவுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள், கொசு விரட்டிகளைப் பயன்படுத்தும் விடயத்தில் கூடுதல் கவனம் வேண்டும்
மழைக் காலத்தில் இயல்பாகவே உடலின் ஜீரண சக்தி குறைந்துவிடுவதால், அதிகம் காரம், எண்ணெய், மசாலா கலந்த உணவுகளை ஒதுக்கிவிடலாம்.
வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம். சுகாதாரமற்ற சூழலால் ஏற்படும் வாந்தி பேதியை இது தவிர்க்கும்.
உடல்நலக் குறைவானவர்களுக்கு இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த எளிமையான உணவுகளே உகந்தது.
குளிர் காலத்தில் நாம் வழக்கமாக அருந்தும் காபி, தேனீருக்கு மாற்றாக, காய்கறி சூப் அருந்தலாம். கொதித்து ஆறிய வடிகட்டிய நீரைச் சமையலுக்குப் பயன்படுத்துவது நல்லது.

ஆதாரம் : டாக்டர் விகடன்







All the contents on this site are copyrighted ©.