2013-09-04 16:19:53

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஜூன்,26,2013. இவ்வாண்டு ஜூலை மாதம் தென்அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் 28வது உலக இளையோர் மாநாடு இடம்பெற்றதையொட்டி ஜூலை 22 முதல் 29 வரை அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்குப்பின் இப்புதனன்றுதான், பொதுமறைபோதகத்தில் விசுவாசிகளை நேரடியாகச் சந்தித்ததால், அத்திருப்பயணம் பற்றியே தன் மறைக்கல்விப் போதனையை வழங்கினார்.
தன் இறைபராமரிப்பின் வழி இந்த அழகானக்கொடையை வழங்கியதற்கு, அமெரிக்கக்கண்டத்தைச் சார்ந்தவன் என்ற முறையில், இறைவனுக்கு நன்றி நவில்கின்றேன். அன்னைமரியின் தொடர்ந்த இருப்புக்காக Aparecida அன்னைமரிக்கும் நன்றி நவில்கின்றேன். பிரேசில் நாட்டின் சமூக மற்றும் திரு அவை அதிகாரிகளுக்கு மீண்டும் ஒருமுறை என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பிரேசில் நாட்டு மக்கள் மிகவும் அற்புதமானவர்கள்.
என்னுடைய பயணத்தை மூன்று வார்த்தைகளில் விவரிக்க ஆவல் கொள்கிறேன். வரவேற்பு, கொண்டாட்டம் மற்றும் மறைப்பணி. உலக இளையோர் தினம், நம் அனைவரையும் வரவேற்பதை தன் முதல் குணநலனாகக் கொண்டிருந்தது. ஒவ்வொரு சந்திப்பும் அதற்கேயுரிய சவால்களைக் கொண்டுள்ளன. ஆனால் அச்சவால்களை, உன்னத வரவேற்பு மூலம் மாற்றியமைக்க முடியும். அடுத்தது, கொண்டாட்டம். கடவுளைப் புகழ்வதும், அவர் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து, மௌனத்தில் அவரை ஆராதிப்பதும், உலக இளையோர் தினத்தின் மணிமகுட அனுபவமாக இருந்தது. மூன்றாவது கூறாக வருவது மறைப்பணி. 'நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்' என்று கூறிய இயேசு, 'இதோ! உலக முடிவு வரை நான் உங்களோடு இருக்கிறேன்' என்றும் எடுத்துரைத்தார். இது முக்கியமான ஒன்று. கிறிஸ்துவுடன்தான் நாம் நற்செய்தியை பிறருக்குக் கொணரமுடியும். வரவேற்பு, கொண்டாட்டம், மறைப்பணி என்ற இந்த மூன்று வார்த்தைகளும் ரியோ உலக இளையோர் தினத்தை மட்டும் நினைவுறுத்துபவைகளாக இல்லாமல், நம்முடைய வாழ்வுக்கும் சமூகங்களுக்கும் நல்தூண்டுதலின் ஆதாரமாகவும் விளங்குவதாக.
இவ்வாறு தன் இவ்வார பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்








All the contents on this site are copyrighted ©.