2013-09-04 16:36:15

சிரியாவின் அமைதிக்காகத் திருத்தந்தை அவர்களுடன் சேர்ந்து செபிக்க முஸ்லிம் அறிவாளர் அழைப்பு


செப்.04,2013. சிரியாவுக்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபிக்கவிருக்கும் நாள் அமைதிக்கானத் தீர்வுக்குக் கதவைத் திறக்கும் நாளாக இருக்கின்றது என இஸ்லாம் மத நிபுணரான Ridwan Al-Sayyid ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சிரியாவுக்கெதிரான இராணுவத் தாக்குதல், சிரியாவிலும், லெபனனிலும் மக்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்கும் என்று கூறிய Ridwan Al-Sayyid, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமைதிக்கு ஆதரவாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு லெபனன் மக்கள் நன்றியுள்ளவர்களாய் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
சிரியாவின் அசாத் ஆட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் சண்டையில் அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் துன்புறுகின்றனர் என்றுரைத்த அவர், இதுவரை யாரும் தூதரக வழியில் தீர்வு காண முயற்சிக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், வட இஸ்ரேலில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் சிரியாவுக்கெதிரான இராணுவத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து பேரணி ஒன்றை நடத்தினர். இதில் எருசலேம் துணை ஆயர் Giacinto-Boulos Marcuzzo அவர்களும் கலந்து கொண்டார்.

ஆதாரம் : AsiaNews / CWN







All the contents on this site are copyrighted ©.