2013-09-02 16:10:20

மூன்றாம் கிரகரி : சிரியாவும் மத்திய கிழக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அமைதிக்கானச் செபத்தில் ஒன்றிப்பு


செப்.,02,2013. சிரியாவில் அமைதி திரும்ப திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள செப நாள் அமைதியின் அசாதாரண அடையாளம் எனவும், இது துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பகுதி மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் மாபெரும் அன்பைக் காட்டுகின்றது எனவும் அந்தியோக்கியாவின் மெல்கிதே கிரேக்க கத்தோலிக்க முதுபெரும் தந்தை மூன்றாம் கிரகரி லகாம் கூறினார்.
செப்டம்பர் 07, வருகிற சனிக்கிழமையன்று இரவு 7 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் தொடங்கும் அமைதிக்கான செப வழிபாட்டு நேரத்தில் மத்திய கிழக்கிலும், உலகெங்கும் இருக்கின்ற மெல்கிதே கிரேக்க வழிபாட்டுமுறையின் அனைத்துப் பங்குத்தளங்களும் கலந்து கொள்வதற்கானத் தயாரிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் முதுபெரும் தந்தை மூன்றாம் கிரகரி.
அமைதிக்காகச் செபிக்க விரும்பும் அனைவருக்கும் வசதியாக தங்கள் ஆலயங்களை நள்ளிரவு வரை திறந்து வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.