2013-09-02 16:08:08

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிரியாவின் அமைதிக்காக விடுத்த அழைப்புக்குச் சீனா நன்றி


செப்.,02,2013. சிரியாவில் அமைதி திரும்ப திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த விண்ணப்பம் ஞானமிக்கது மற்றும் உண்மையானது, சீனர்களாகிய தாங்கள் அவரோடு இருக்கின்றோம், மத்திய கிழக்கில் இனி ஒருபோதும் சண்டைகளைப் பார்ப்பதற்குத் தாங்கள் விரும்பவில்லை என்று சீன அரசின் இரு மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிரியாவில் அமைதி திரும்ப இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் உலகினர் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை வரவேற்று அவருக்கு நன்றி தெரிவித்துள்ள இவ்விரு சீன அரசு அதிகாரிகள், தமாஸ்கு அரசுக்கு எதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டின் எந்தத் தாக்குதலையும் தாங்கள் எதிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.
தங்களை யார் என்று அறிமுகம் செய்ய விரும்பாத இவ்விரு சீன அதிகாரிகள், அந்நாட்டில் கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையேயான உறவுகள் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறித்து சீன அரசு அறிந்திராதபோதிலும், அவர் நல்ல தந்தையாக இருக்கின்றார் என்று கூறியுள்ளதோடு, அவரின் எளிமை, அவர் கிறிஸ்தவ உலகுக்கு ஆற்றும் உரைகள் என அவரின் பல காரியங்களைச் சீன அரசு பாராட்டுகின்றது எனவும் ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.