2013-08-31 15:24:21

புதிய திருப்பீடச் செயலர் பேராயர் பரோலின்


ஆக.,31,2013. புதிய திருப்பீடச் செயலராக பேராயர் பியத்ரோ பரோலின் (Pietro Parolin) அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தற்போதைய திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்களின் பதவி விலகலை திருஅவை சட்ட எண் 354ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், 58 வயதாகும் பேராயர் பரோலின் அவர்களை புதிய திருப்பீடச் செயலராக நியமித்துள்ளார்.
பேராயர் பரோலின், 2013ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியன்று திருப்பீடச் செயலர் பணியைத் தொடங்குவார் எனவும், அதுவரை அப்பணியைச் செய்யுமாறு கர்தினால் பெர்த்தோனே அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுள்ளார் எனவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
இத்தாலியின் விச்சென்சாவுக்கு அருகிலுள்ள Schiavonல் 1955ம் ஆண்டு சனவரி 17ம் தேதி பிறந்த பேராயர் பரோலின், 1986ம் ஆண்டு ஜூலை முதல் தேதி திருப்பீடத் தூதரகப் பணியில் சேர்ந்தார். திருப்பீடச் செயலகத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகள் துறையில் நேரடிப் பொதுச் செயலராக 2002ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி நியமிக்கப்பட்ட இவர், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதியன்று தென் அமெரிக்க நாடான வெனெசுவேலா நாட்டுக்குத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார். இவர் மெக்சிகோ மற்றும் நைஜீரியத் திருப்பீடத் தூதரங்களிலும் பணியாற்றியுள்ளார்.
வத்திக்கான் மற்றும் திருப்பீடத்தின் அனைத்து அரசியல் மற்றும் தூதரகப் பணிகள் திருப்பீடச் செயலகத்தின்கீழ் இயங்குகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.