2013-08-31 15:43:40

இலங்கை சர்வாதிகாரப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது, ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர்


ஆக.,31,2013. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து நான்காண்டுகள் ஆகியும் மக்கள் இன்னும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர் நவி பிள்ளை கூறினார்.
இலங்கையின் தற்போதைய வளர்ச்சி குறித்து அறிவதற்காக அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நவி பிள்ளை இச்சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 26 வருட உள்நாட்டுப் போருக்குப் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களுக்கு மத்தியில் அந்நாடு சர்வாதிகாரப் பாதையில் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருப்பதற்கான அடையாளங்கள் தெரிவதாகக் குறை கூறினார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திரிகோணமலையின் கிழக்கு மாவட்டங்கள் போன்ற இடங்களைப் பார்வையிட்டதோடு கொழும்புவில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்களையும் சந்தித்துள்ளார் நவி பிள்ளை.
மேலும், இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது காணாமல்போனோர் பற்றி ஆராய ஐ.நா. மனித உரிமைகள் அவையின் தூதுக்குழு ஒன்றை அனுப்புவதாக, காணாமல்போனோரின் உறவினர்களிடம் உறுதியளித்துள்ளார் நவி பிள்ளை.
தங்களது தூதுக்குழுவுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் தான் கூறியதாகவும் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : Reuters







All the contents on this site are copyrighted ©.