2013-08-30 15:03:02

டுவிட்டரில் திருத்தந்தை பிரான்சிஸ் : விசுவாச வாழ்வு என்பது கிறிஸ்துவை நமது வாழ்வில் மையமாக வைப்பது


ஆக.,30,2013. விசுவாசம் என்பது ஓர் அலங்காரப் பொருளோ அல்லது கண்காட்சிக்கு உரியதோ அல்ல, மாறாக, விசுவாசத்தைக் கொண்டிருத்தல் என்பது கிறிஸ்துவை உண்மையாகவே நமது வாழ்வின் மையமாக வைப்பதாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், நம் வாழ்வில் கிறிஸ்துவை மையப்படுத்தி வாழ வேண்டுமென்பதை இவ்வெள்ளியன்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உரோமேனிய நாட்டின் Bucarestல் மறைசாட்சியான அருள்பணியாளர் Vladimir Ghika அவர்கள் இச்சனிக்கிழமையன்று முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தப்படவிருக்கிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, கர்தினால் Angelo Amato அவர்கள், இந்த முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தும் திருப்பலியை நிகழ்த்துவார்.
அருள்பணியாளர் Vladimir Ghika, 1954ம் ஆண்டு மே 16ம் தேதியன்று தனது 80வது வயதில் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.