2013-08-30 15:06:15

சிரியாவில் இராணுவரீதியாக அல்ல, அரசியல்ரீதியாக தீர்வு காணப்பட அலெப்போ ஆயர் அழைப்பு


ஆக.,30,2013. சிரியாவைத் தாக்குவதன்மூலம் ஏற்படும் பலன்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து மேற்கத்திய நாடுகள் விவாதித்துவரும்வேளை, சிரியாவுக்கெதிரான இராணுவத் தாக்குதல் மற்றுமோர் உலகப்போருக்கு இட்டுச்செல்லக்கூடும் என அலெப்போ கல்தேய ஆயர் Antoine Audo எச்சரித்தார்.
கடந்த வாரத்தில் தமாஸ்கு நகருக்கு அருகில் வேதிய ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளும், அமெரிக்க ஐக்கிய நாடும் சிரியாவுக்கெதிராக இராணுவத் தாக்குதலை நடத்த சிந்தித்துவரும்வேளை, வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த அலெப்போ ஆயர் Audo இவ்வாறு எச்சரித்தார்.
வெளிநாட்டு இராணுவத் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து சிரியாவிலுள்ள மக்கள் கவலையடைந்துள்ளனர் என்றுரைத்த ஆயர், இதற்கு அரசியல்ரீதியான தீர்வையே பல கிறிஸ்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
சிரியாவில் முடிவில்லாமல் இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் குறித்து கோபமும், வெறுப்பும் அதிகரித்துள்ளன என்று கூறிய ஆயர் Audo, சிரியாவில் அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு உதவ வேண்டியது அனைத்துலக சமுதாயத்தின் கடமை என்றும் கூறினார்.
அலெப்போவில் கடந்த ஆண்டில் 80 விழுக்காட்டுச் சிறார் பள்ளிக்குச் செல்லவில்லையெனவும் ஆயர் Audo தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.