2013-08-30 15:10:09

எகிப்தில் பணிசெய்யும் இந்திய அருள்பணியாளர் : வன்முறைப் பயத்தில் வாழ்ந்து வருகிறோம்


ஆக.,30,2013. எகிப்தில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் இஸ்லாம் தீவிரவாதிகளால் குறிவைத்து தாக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டில் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இந்திய இயேசு சபை அருள்பணி Bimal Kerketta கூறினார்.
எகிப்தின் Minyaவிலுள்ள தங்களது இயேசு சபை பள்ளியில் படிக்கும் மாணவர்களில் நான்கில் மூன்று பாகத்தினர் முஸ்லீம்களாக இருக்கின்றபோதிலும், கிறிஸ்தவ சமூகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது என்று அருள்பணி Kerketta கூறினார்.
Minyaவில் தங்களது ஆலயத்துக்கு முன்பாக முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பினர் ஊர்வலம் வந்தபோது அவ்வாலயம் இன்னும் அழிக்கப்படாமல் இருப்பதை அவர்கள் வியந்து பார்த்துக்கொண்டு சென்றனர் என்றும் அவ்வருள்பணியாளர் தெரிவித்தார்.
அரபு மொழியிலான தங்களது பள்ளியில், பாலர் வகுப்பிலிருந்து இடைநிலை வகுப்புகள்வரை நடத்தப்படுகின்றது என்றும், இதிலுள்ள மாணவர்களில் 75 விழுக்காட்டினர் முஸ்லீம்கள் என்றும் அவர் கூறினார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.