2013-08-29 15:36:49

சிரியாவுக்கெதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத் தலையீடு ஒரு குற்றச் செயல், முதுபெரும் தந்தை லகாம்


ஆக.,29,2013. சிரியாவுக்கெதிரான தாக்குதலை நடத்த அமெரிக்க ஐக்கிய நாடும் NATO படைகளும் தயாராகவுள்ளவேளை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிரியாவுக்கெதிரான இராணுவத் தலையீடு ஒரு குற்றச் செயலாக இருக்கும், இத்தலையீடு மேலும் அதிகமான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக அமையும் என, மெல்கிதே கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் எச்சரித்துள்ளார்.
கொலை செய்யும் நோக்கத்துடனே உலகெங்கிலுமிருந்து இஸ்லாம் தீவிரவாதிகள் சிரியாவில் நுழைவதைத் தடைசெய்வதற்கு அமெரிக்க ஐக்கிய நாடும், மேற்கத்திய நாடுகளும் எதுவும் செய்யவில்லை என்று குறைகூறினார் முதுபெரும் தந்தை கிரகரி லகாம்.
தற்போது நிலையானதன்மை மிகவும் தேவைப்படும் சிரியாவின் அரசுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் அறிவற்ற செயல் என்று கூறிய அவர், சிரியாவில் இஸ்லாம் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினால் கிறிஸ்தவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் சிரியாவுக்கெதிராக நடத்தப்படும் இராணுவத் தாக்குதல் பேரழிவைக் கொண்டுவரும் என கல்தேய வழிபாட்டுமுறைத் தலைவர் முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ கூறினார்.

ஆதாரம் : Fides/CWN







All the contents on this site are copyrighted ©.