2013-08-28 15:32:53

வெளிநாடுகளிலிருந்து வரும் இராணுவ முயற்சிகள் சிரியாவின் நிலையை இன்னும் அதிக அழிவுக்கே இட்டுச்செல்லும் - Aleppo ஆயர் Antoine Audo


ஆக.28,2013. அமைதியின் மீது நம்பிக்கையை உருவாக்கும் முயற்சிகளையே சிரியாவில் வாழும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் தவிர, இங்கு நிலவும் வெறுப்பை வளர்க்கும் முயற்சிகளை அல்ல என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
சிரியாவின் வன்முறைகளால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நகர்களில் ஒன்றான Aleppoவின் ஆயர் Antoine Audo அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
சிரியாவில் வேதியத் தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற செய்தியை ஆகஸ்ட் 26, கடந்த திங்களன்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் John Kerry அவர்கள் கூறியதைத் தொடர்ந்து, சிரியாவில் அமேரிக்காவின் இராணுவத் தலையீடு இருக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும் இராணுவ முயற்சிகள் சிரியாவின் நிலையை இன்னும் அதிக அழிவுக்கே இட்டுச்செல்லும் என்று கூறிய ஆயர் Audo அவர்கள், உரையாடல் மட்டுமே அமைதியைக் கொணரும் என்பதை வலியுறுத்தினார்.
சிரியாவில் உரையாடல்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துவரும் விண்ணப்பங்கள் சிரியாவில் வாழும் அப்பாவி மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்துள்ளது என்று கூறிய ஆயர் Audo அவர்கள், உரையாடல் வழியை மட்டுமே தானும் நம்பியுள்ளதாக CNA செய்தியிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.