2013-08-28 15:32:03

பொது நிதியை ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு பிலிப்பின்ஸ் அரசு பயன்படுத்தவேண்டும் - கர்தினால் தாக்லே


ஆக.28,2013. குடும்பங்கள், பணியிடங்கள், அரசியல் என்ற அனைத்துத் தளங்களிலும் நேர்மையும், மாண்பும் கடைபிடிக்கப்படவேண்டும் என்று மணிலா உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.
பொது நிதியை மக்களின் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு பிலிப்பின்ஸ் அரசு பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிலாவில் 3,50,000க்கும் அதிகமானோர் மேற்கொண்ட ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கர்தினால் தாக்லே அவர்கள் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
நாடுதழுவிய முன்னேற்ற நிதி என்ற பெயரில் 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நிதி, 1996ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தகுந்த வழிகளில் பயன்படுத்தப்படவில்லை என்பதை போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், கர்தினால் தாக்லே அவர்களும் சுட்டிக்காட்டினர்.
கர்தினால் தாக்லே அவர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில் சமுதாய அக்கறை கொண்ட பல்வேறு சமயத் தலைவர்களும், ஏனைய சமுதாய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

ஆதாரம் : AsiaNews/CBCP








All the contents on this site are copyrighted ©.