2013-08-28 15:36:44

சிரியாவில் கடத்தப்பட்ட இயேசு சபை அருள் பணியாளர் Paolo Dall'Oglio விடுவிக்கப்பட செபமும், உண்ணாநோன்பும்


ஆக.28,2013. ஜூலை மாதம் சிரியாவில் கடத்தப்பட்ட இயேசு சபை அருள் பணியாளர் Paolo Dall'Oglio அவர்கள் விடுவிக்கப்படவும், சிரியாவில் நிலவும் அமைதியற்றச் சூழல் உரையாடல் வழியாக தீர்க்கப்படவும் செபமும், உண்ணாநோன்பும் மேற்கொள்ளப்பட்டன என்று அந்நாட்டு அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.
சிரியா கத்தோலிக்க வழிபாட்டு முறை தவ இல்லத்தின் தலைவர் அருள் பணியாளர் Jacques Mourad அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், ஆகஸ்ட் 28, இப்புதனன்று தங்கள் தவ இல்லத்தில் எத்தியோப்பிய நாட்டு புனித மோசே அவர்களின் திருநாள் கொண்டாடப்படுகிறது என்றும், இத்திருவிழாவின் திருவிழிப்பு நாளன்று அருள் பணியாளர் Dall'Oglio அவர்களுக்காகவும், சிரியா நாட்டுக்காகவும் செபமும், உண்ணாநோன்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் கூறினார்.
கடத்திச் செல்லப்பட்டுள்ள அருள் பணியாளர் Dall'Oglio அவர்களைப் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை தெரியவில்லை என்றும், அவருக்காகவும், சிரியாவில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் சிறப்பான செபமும் உண்ணாநோன்பும் மேற்கொள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதையும் அருள் பணியாளர் Mourad எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides / Zenit








All the contents on this site are copyrighted ©.