2013-08-28 15:35:58

குர்திஸ்தான் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், வேறு இடங்களுக்குக் குடிபெயர்வதை நிறுத்தவேண்டும் - கல்தேய முதுபெரும்தந்தை Raphael Luis Sako


ஆக.28,2013. ஈராக் நாட்டின் மேற்கில் அமைந்துள்ள குர்திஸ்தான் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், தங்கள் இல்லங்களை விற்றுவிட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர்வதை நிறுத்தவேண்டும் என்று அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறினார்.
கடந்த ஒருவார அளவில் குர்திஸ்தான் பகுதியில் அமைந்துள்ள Zakho Emmadea மறைமாவட்டத்தில் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்ட கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை Raphael Luis Sako அவர்கள், அப்பகுதியில் 2000 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்கள், தொடர்ந்து அப்பகுதியில் வேரூன்றி வாழவேண்டும் என்று வேண்டுகோளை விடுத்தார்.
கிறிஸ்துவ மறை தொடங்கிய காலத்திலிருந்தே அப்பகுதிகளில் வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்கள், கடந்த இருபது நூற்றாண்டுகளாக பல்வேறு போராட்டங்களின் மத்தியிலும் உறுதியுடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய முதுபெரும்தந்தை சாகோ அவர்கள், கடந்த பத்தாண்டுகளில் அப்பகுதியில் 6,00,000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் வெளியேறியுள்ளதையும் வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.
ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் Shia மற்றும் Sunni முஸ்லிம் பிரிவினரிடையே உருவாகியுள்ள மோதல்களால், குர்திஸ்தான் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துரைத்த முதுபெரும்தந்தை சாகோ அவர்கள், அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பல்வேறு உதவிகள் தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அப்பகுதியில் நிலவும் வன்முறைகளை நிறுத்துவதோடு, அப்பகுதி மக்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் கல்வி வசதிகளையும் உருவாக்கினால் மட்டுமே அங்குள்ள கிறிஸ்தவர்கள் அங்கு தங்கமுடியும் என்பதையும் பாபிலோன் முதுபெரும்தந்தை சாகோ அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides / AsiaNews








All the contents on this site are copyrighted ©.