2013-08-28 13:12:21

அன்னைமரியா திருத்தலங்கள் – Czestochowa கறுப்பு அன்னைமரியா திருத்தலம், போலந்து


ஆக.28,2013. உலகம் முழுவதும் போற்றப்பட்டுவரும் கறுப்பு அன்னைமரியா திருவுருவங்களில் போலந்து நாட்டின் Czestochowa நகரிலுள்ள அன்னைமரியா திருவுருவப் படமும் ஒன்று. போலந்து நாட்டைச் சேர்ந்த முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் திருஅவையை தலைமையேற்று வழிநடத்தத் தொடங்கிய பின்னர் Czestochowa அன்னைமரியா புகழ் உலகெங்கும் பரவத் தொடங்கியது. இவ்வன்னைமரியா திருவுருவப்படம் Jasna Gora துறவு இல்லத்துக்கு அருகிலுள்ள இடத்தில் ஏறத்தாழ ஆறு நூற்றாண்டளவாக வைக்கப்பட்டிருந்ததால் Jasna Gora அன்னைமரியா எனவும் சில சமயங்களில் இவ்வன்னை அழைக்கப்படுகிறார். இந்தத் திருப்படம் குறித்து பாரம்பரியமாகச் சில செய்திகள் சொல்லப்படுகின்றன.
இயேசு சிலுவையில் அறையுண்டு இறந்த பின்னர் நற்செய்தியாளர் புனித லூக்கா, அன்னைமரியா உணவு உண்ணும் கேதார் மர மேஜையின்மேல் இந்த கறுப்பு அன்னைமரியா திருவுருவப் படத்தை வரைந்தார் எனவும், அவர் அதை வரைந்து கொண்டிருந்தபோது அன்னைமரியா இயேசுவின் வாழ்வு பற்றிப் புனித லூக்காவுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார், அவர் அதனைப் பின்னாளில் தனது நற்செய்தியில் இணைத்தார் எனவும் சொல்லப்படுகின்றது. பின்னர், உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டைனின்(Constantine) தாய் புனித ஹெலன் புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டபோது கி.பி.326ம் ஆண்டில் எருசலேமில் இந்தப் படத்தைக் கண்டுபிடித்து தனது மகனிடம் கொடுத்தார். பேரரசரும் கான்ஸ்ட்டான்டிநோபிள் நகரில் ஒரு திருத்தலத்தைக் கட்டி இதை வைத்தார். இத்திருத்தலத்தில் ஐந்து நூற்றாண்டளவாக வைக்கப்பட்டிருந்த இந்தக் கறுப்பு அன்னைமரியா திருப்படம் போலந்துக்குக் கொண்டுவரப்படும்வரை அரசக் குடும்பங்களின் வரதட்சணையாக ஒவ்வோர் இடமாகச் சென்று கொண்டிருந்தது. பின்னர் 5ம் நூற்றாண்டில் போலந்து அரசர் புனித Ladislausடம் இப்படம் வந்தது. இப்புனித அரசர், Tartarகளின் தொடர் தாக்குதல்களிலிருந்து இப்படத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் பிறந்த Opala நகரில் பாதுகாப்பாக வைக்க விரும்பினார். Opala நகருக்குச் செல்லும் வழியில் Czestochowa நகர் இருந்ததால் அன்று இரவு அங்கேயே செலவிட்டார். அவ்வேளையில் அப்படம் "ஒளிமிக்க குன்று (Bright Hill)" எனப் பொருள்படும் Jasna Goraவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த மரத்தாலான சிறிய விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் வைக்கப்பட்டது. அடுத்தநாள் அப்படத்தை எடுத்து வண்டியில் வைத்துப் பயணத்தைத் தொடங்கினார் அரசர். ஆனால் குதிரைகள் அவ்விடத்தைவிட்டு நகர மறுத்தன. ஆதலால் இது கடவுளின் விருப்பம் என்றறிந்த அரசர் Ladislaus, அப்படத்தை Czestochowaவின் விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் வைத்தார்.
Czestochowa கறுப்பு அன்னைமரியா குறித்த பாரம்பரியம் மேலும் தொடருகிறது. போலந்து அரசர் Ladislausன் ஆட்சிக் காலத்தில் சண்டையின்போது இப்படம் நகர வாயிலில் வைக்கப்பட்டது. அதைப் பார்த்த எதிரிகளின் படை பயந்து ஓடியது. அன்னைமரியா நகரை அழிவினின்று காப்பாற்றினார். 1382ம் ஆண்டில் Tartar இனத்தவர் அரசர் லடிஸ்லாசின் கோட்டையைத் தாக்கும்வரை இப்படம் பலரிடம் இருந்தது. Tartar இனத்தவரின் தாக்குதலின்போது கோட்டை மதில் சுவரில் வைக்கப்பட்டிருந்த இப்படமும் தாக்கப்பட்டது. ஒரு படைவீரரின் அம்பு அன்னைமரியின் தொண்டை வழியாகப் பாய்ந்தது. இந்த அடையாளத்தை இன்றும் அப்படத்தில் காண முடிகின்றது. பின்னர் அரசர் அப்படத்தை Czestochowa ஆலயத்துக்கு மாற்றினார். 1430ம் ஆண்டில் இந்த ஆலயம் Hussite என்பவர்களால் ஆக்ரமிக்கப்பட்டு சூறையாடப்பட்டது. அவர்களில் ஒருவர் இப்படத்தை தனது கத்தியால் இருமுறை குத்தினார். அவர் மூன்றாவது முறை குத்துவதற்கு முன்னர் வேதனையால் துடித்து தரையில் விழுந்து இறந்தார். இந்தக் கத்தி வெட்டுகளையும், அம்பால் ஏற்பட்ட தழும்பையும் இன்றும் அப்படத்தில் காணலாம். இக்காயத் தழும்புகளை மீண்டும் மீண்டும் பழுது பார்க்க முயற்சித்தபோதெல்லாம் அவை மறையவில்லை என்று சொல்லப்படுகின்றது.
ஆயினும் நவீன கால வல்லுனர்கள் இந்தப் பாரம்பரியம் குறித்து தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர். இந்தப்படம், 13ம், 14ம் நூற்றாண்டின் Byzantine ஓவியவடிவில் உள்ளது என்று Leonard Moss என்பவர் சொல்லியுள்ளார். இப்படம் காட்டுமிராண்டிகளால் மிகவும் சேதப்படுத்தப்பட்டதால் 1434ம் ஆண்டில் இது புதிதாக வரையப்பட்டது, ஆயினும் இதை வரைந்தவர்கள், அப்படம் முதலில் இருந்ததுபோலவே வரைந்துள்ளனர் என Janusz Pasierb என்பவர் சொல்லியுள்ளார்.
Czestochowa கறுப்பு அன்னைமரியா தொடக்கமுதல் இன்றுவரை தொடர்ந்து அற்புதங்களைச் செய்து வருகிறார். இத்திருவுருவப்படம் கான்ஸ்டான்டிநோபிள் நகரில் வைக்கப்பட்டிருந்தபோது, Saracens என்பவர்கள் அந்நகரைத் தாக்கிக் கைப்பற்ற வந்தனர். அப்போது அவர்களை அச்சுறுத்தி விரட்டியிருக்கிறார் இவ்வன்னைமரியா. அதேபோல் 1655ம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டின் 12 ஆயிரம் படைவீரர்கள் இவ்வன்னைமரியா திருத்தலத்தை ஆக்ரமிக்க வந்தபோது போலந்து நாட்டின் 300 பேர் கொண்ட குழு அவர்களை விரட்டியுள்ளது. அடுத்த ஆண்டில் இந்த கறுப்பு அன்னைமரியாவை போலந்தின் அரசி என அறிக்கையிட்டார் அப்போதைய போலந்து அரசர் கசிமீர். போலந்தின் வார்சா நகரைக் கைப்பற்றுவதற்காக 1920ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி இரஷ்யப் படைகள் Vistula நதிக்கரையில் முகாமிட்டன. அப்போது போலந்து மக்கள் இவ்வன்னையிடம் செபித்தனர். அடுத்த நாளான செப்டம்பர் 15ம் தேதி வியாகுல அன்னை விழாவன்று வார்சா நகருக்குமேலே மேகங்களுக்கு இடையில் அன்னைமரியா தோன்றியதால் இரஷ்யப் படைகள் திரும்பிச் சென்றன. இந்தப் புதுமை, Vistula புதுமை என போலந்து வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
போலந்தை ஜெர்மானியர்கள் ஆக்ரமித்திருந்த இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர், மதம் சார்ந்த அனைத்துத் திருப்பயணங்களையும் தடைசெய்தார். ஆயினும் கறுப்பு அன்னைமரியாமீது தாங்கள் கொண்டிருக்கும் அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் விதமாக ஐந்து இலட்சம் போலந்து நாட்டவர், ஹிட்லரை எதிர்த்து Czestochowaவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டனர். 1945ம் ஆண்டில் போலந்து விடுதலை அடைந்தபோது 15 இலட்சம் மக்கள் இந்தப் புதுமை அன்னைமரியாவிடம் நன்றி செலுத்தினர். முன்னாள் சோவியத் யூனியனின் கம்யூனிச ஆட்சியில் போலந்து மக்களின் விசுவாசம் ஆழமடைந்தது. வார்சா நகரைக் கைப்பற்றுவதற்கு முதல் முறை முயன்ற இரஷ்யர்கள் தோல்வியடைந்தனர். இதன்பின்னர் 28 ஆண்டுகள் கழித்து 1948ம் ஆண்டில் வார்சா நகரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போதும் எட்டு இலட்சத்துக்கு மேற்பட்ட போலந்தியர்கள் விண்ணேற்பு அன்னைமரியா விழாவன்று Czestochowaவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டனர். அப்போது தெருக்களைக் காவல் காத்த கம்யூனிச படைவீரர்களைத் தாண்டி துணிவுடன் சென்றனர்.
1980களின் தொடக்கத்தில் போலந்தின் சாலிடார்நோஸ் தொழிற்சங்கத்தலைவர் லெஹ் வவென்சா தனது சட்டையில் இவ்வன்னை திருவுருவத்தைக் குத்திக்கொண்டார். முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற பல மாதங்களுக்குப் பின்னர் 1979ம் ஆண்டில் போலந்துக்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்கத் திருப்பயணத்தில் Czestochowa சென்று இவ்வன்னையிடம் செபித்தார்.
புனித Ladislaus திருவிழாவான ஆகஸ்ட் 26ம் தேதியன்று, இன்றும் கறுப்பு அன்னைமரியாவுக்குச் சிறப்பு விழா எடுக்கின்றனர் போலந்து மக்கள். இவ்வன்னைமரியா திருப்படம் கறுப்பாக இருப்பதால் இவர் "கறுப்பு அன்னைமரியா" என அழைக்கப்படுகிறார். “நான் கறுப்பு, ஆயினும் நான் அழகு” என விவிலியத்தின் இனிமைமிகு பாடல் நூலில் சொல்லப்பட்டிருப்பதுபோல, அன்னமரியா அழகானவர். அக்காலத்தில் மெழுகுதிரிகளே அதிகம் பயன்படுத்தப்பட்டதால் அவற்றின் புகையினால் இப்படம் கறுப்பாக மாறியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
1717ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் கிளமென்ட் இந்தப் புதுமை திருப்படத்தை அங்கீகரித்தார். இப்படத்துக்கு முதலில் சூட்டப்பட்ட மகுடம் 1909ம் ஆண்டில் திருடப்பட்டுவிட்டது. பின்னர் திருத்தந்தை 10ம் பத்திநாதர் ஆபரணங்கள் மிகுந்த தங்கத்தாலான மகுடத்தை இவ்வன்னைக்கு வைத்தார். போலந்து நாட்டு Czestochowa கறுப்பு அன்னைமரியா குடிகொண்டுள்ள திருத்தலம் உலகப் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. அன்னைமரியா பல பெயர்களில் தம் பிள்ளைகளாகிய நம்மீது அன்பும் கருணையும் கொண்டு நமக்காகத் தம் மகன் இயேசுவிடம் பரிந்துபேசி வருகிறார். அத்தாயிடம் நாமும் நம்பிக்கையோடு செல்வோம்.








All the contents on this site are copyrighted ©.