2013-08-27 16:06:30

விவிலியத் தேடல் அறிவற்ற செல்வன் உவமை - பகுதி 3


RealAudioMP3 நம் ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கிய அங்கம் வகிப்பவை நம் கனவுகள்... நாம் யார், எப்படிப்பட்டவர் என்பதை நமக்கு எடுத்துரைக்கும் அடையாளங்கள் நம் கனவுகள். நம் ஆழ்மனதில் புதைந்திருக்கும் அச்சத்தை, ஆவலை, ஆத்திரத்தை வெளிக்கொணரும் ஒரு கருவி நமது கனவு. கனவைப்பற்றி இன்றைய விவிலியத் தேடலில் நாம் குறிப்பாகச் சிந்திப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன. (நாம் ஏற்கனவே கற்றனைத் தூறும் பகுதியில் சிந்தித்ததுபோல்) அமெரிக்க ஐக்கிய நாட்டில் கறுப்பின மக்களின் தலைவராக விளங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வழங்கிய 'எனக்கொரு கனவு உண்டு' என்ற புகழ்பெற்ற உரையின் பொன்விழாவை இப்புதனன்று கொண்டாடுகிறோம்... இது முதல் காரணம்.
தான், தனது, என்று கனவு காணாமல், மக்கள், குறிப்பாக, அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள், எதிர்காலத்தில் எவ்விதம் வாழவேண்டும் என்று கனவு கண்டவர் மார்ட்டின் லூத்தர் கிங். இவருக்கு முற்றிலும் எதிராக, மற்றொரு துருவமாக, தன்னைப்பற்றி மட்டுமே கனவுகண்ட 'அறிவற்ற செல்வனை'ப் பற்றி இயேசு கூறிய உவமையில் நம் தேடலைத் தொடர்கிறோம் என்பது இரண்டாவது காரணம். மார்ட்டின் லூத்தர் கிங் அவர்கள் கண்ட கனவையும், அறிவற்றச் செல்வன் கண்ட கனவையும் இணைத்துச் சிந்திக்கும்போது நம் வாழ்வுக்குத் தேவையான சில பாடங்களை நாம் பயிலமுடியும்.

முன்னோர் வழங்கிய நிலம், அங்கு இறைவன் வழங்கிய மழை, அந்நிலத்தில் தொழிலாளிகள் வழங்கிய உழைப்பு என்ற கொடைகள் எதையும் எண்ணிப்பார்க்காமல், தன் களஞ்சியங்களை அடைந்த விளைபொருள்களால் மட்டும் தன் எண்ணங்களை நிறைத்த அறிவற்ற செல்வனின் எண்ண ஓட்டங்கள் ஒரு கனவாக, அதுவும், பகற்கனவாக இவ்வுவமையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
பகற்கனவு காண்பது வீணானது என்பது பொதுவாக நம் மத்தியில் நிலவும் கருத்து. இதற்கு மாறுபட்ட கருத்தை T.E.Lawrence என்பவர் கூறியுள்ளார். 'Lawrence of Arabia' என்ற அடைமொழியுடன் புகழ்பெற்றுள்ள இவர், இருவகைக் கனவுகளை வேற்றுமைப்படுத்துகிறார்:
"அனைவரும் கனவு காண்கின்றனர். ஆனால், ஒரே நிலையில், ஒரே அளவில் அல்ல. தங்கள் சிந்தனைகளின் தூசிபடிந்த பகுதிகளை இரவில் கனவாகக் காண்பவர்கள், காலையில் எழுந்ததும், அவற்றை வீண் என ஒதுக்கிவிடுகின்றனர். ஆனால், பகலில் கனவு காண்பவர்கள் ஆபத்தானவர்கள். கண்களைத் திறந்தவண்ணம் தாங்கள் காணும் கனவை அவர்கள் நனவாக்க விழைகின்றனர்."

கனவின் வேறுபல பரிமாணங்களை அறிஞர்கள் பலர் அழகான கருத்துக்களாக நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்:
"உலகில் உள்ளவற்றைக் கண்டு, 'ஏன் இவ்விதம் உள்ளது?' என்ற கேள்வியை நீ எழுப்புகிறாய். ஆனால், உலகில் இல்லாதவற்றைக் கனவாகக் கண்டு, 'ஏன் இவ்விதம் இருக்கக்கூடாது?' என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்" என்று சொன்னவர் புகழ்பெற்ற எழுத்தாளர், George Bernard Shaw அவர்கள்.
1961ம் ஆண்டு 35வது அமெரிக்க அரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற John Kenndyயும், அவரது தம்பி Robert Kennedyயும், Bernard Shaw அவர்களின் இக்கூற்றைப் பயன்படுத்தி, அமெரிக்க சமுதாயத்தில் ஏன் மாற்றங்கள் நிகழக்கூடாது என்ற கேள்வியை எழுப்பி வந்தனர்.

அமெரிக்க மக்களின் மனசாட்சியைத் தூண்டி எழுப்பும் வகையில் தங்கள் கனவுகளைப் பகிர்ந்துகொண்ட Kennedy சகோதரர்களும், மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களும் ஒரே காலக் கட்டத்தில் வாழந்தவர்கள்.
"எனக்கொரு கனவு உண்டு" என்று மார்ட்டின் லூத்தர் கிங் அவர்கள் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி முழக்கமிட்ட இவ்வுரையின் விளைவாக, இனம், மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரும் வேற்றுமைப்படுத்தப்படக் கூடாது என்ற குடியுரிமைச் சட்டம் 1964ம் ஆண்டு அமெரிக்காவில் அமலுக்கு வந்தது. அதற்கு அடுத்த ஆண்டு, அனைவருக்கும் வாக்குரிமை என்ற சட்டமும் அமலுக்கு வந்தது.
மாற்றங்களை உருவாக்கும் கனவுகளை மக்களுடன் பகிர்ந்துகொண்ட இம்மூவரும், தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாயினர். அரசுத்தலைவர் John Kennedy - 1963ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதியும், மார்ட்டின் லூத்தர் கிங் 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதியும், அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட முனைந்திருந்த Robert Kennedy, அதே ஆண்டு ஜூன் 6ம் தேதியும் கொல்லப்பட்டனர்.

தங்களையும், தங்கள் உயிரையும் பெரிதாகக் கருதாமல், தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் மாற்றங்களைக் கொணர இம்மூன்று தலைவர்களும், இவர்களைத் தொடர்ந்து பலரும் கண்ட கனவுகள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஓரளவு மாற்றங்களைக் கொணர்ந்துள்ளன என்றுதான் சொல்லவேண்டும். கறுப்பின மக்களில் ஒருவரான பாரக் ஒபாமா, அரசுத்தலைவராக, இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இக்கனவின் எதிரொலி என்று சொல்லலாம். இருப்பினும், அந்நாட்டிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அநீதிகள் களையப்பட வேண்டுமெனில், மானிடராய்ப் பிறந்த நாம் அனைவரும் சமுதாயக் கனவுகளைக் காணவேண்டும்.

சமுதாயக் கனவுகளை நாம் அதிகம் கண்டுவிடக்கூடாது என்ற ஆதங்கத்துடன், குறிக்கோளுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், இன்னும் உலகில் பல நாடுகளிலும் தன்னலக் கனவுகளை வளர்க்கும் பல வழிமுறைகள் ஒவ்வொரு நாளும் நமக்குக் கற்றுத்தரப்படுகின்றன.
"என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" (லூக்கா 12: 19) என்று அறிவற்ற செல்வன் தனக்குள் சொல்லிக்கொண்ட ஆபத்தான சொற்கள், வர்த்தக விளம்பர நிறுவனங்களின் தொடர் முயற்சிகளால் இன்றைய உலகின் தாரக மந்திரமாக மாறிவருவதையும் காண முடிகிறது.

உரோமையரின் வரலாற்றைப் புரட்டினால், 'உண்டு, குடித்து மகிழ்வது' அவர்களிடையே ஓர் அருவருக்கத்தக்கக் கலையாக மாறியது என்பதையும், அதுவே அக்கலாச்சாரத்தைக் குழிதோண்டி புதைக்க ஒரு காரணமாக அமைந்தது என்பதையும் நாம் அறிகிறோம். கலாச்சாரத்தின் உச்சத்தில், புகழின் உச்சியில் தாங்கள் வாழ்வதாக எண்ணிக் கொண்டிருந்த உரோமையச் செல்வந்தர்கள், விருந்துகளின்போது தங்கள் தேவைக்கும் அதிகமாக உண்டனர், குடித்தனர். அவ்விதம் உண்டதையும் குடித்ததையும் வாயில் விரலைவிட்டு வலுக்கட்டாயமாக அவர்கள் வெளியேற்றியபின், மீண்டும் விருந்தில் அமர்ந்து உண்ணவும், குடிக்கவும் முயன்றனர். உரோமையக் கலாச்சார அழிவுக்கு இத்தகைய பழக்கங்களே வித்திட்டன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இயேசுவின் காலத்தில், இஸ்ரயேல் மக்களின் மத்தியில் செல்வத்தில் வாழ்ந்தவர்கள் உரோமையர்களுடன் தொடர்புகளை வளர்த்திருக்க வேண்டும். இத்தகையக் கலாச்சாரத்தின் அருவருப்பான வழிகளுக்கு இஸ்ரயேல் மக்களும் பலியாகி வந்தனர் என்பதை, ஓர் எச்சரிக்கையாகத் இயேசு தர விழைந்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு என்ற வார்த்தைகளை இச்செல்வனின் வார்த்தைகளாக இந்த உவமையில் இயேசு இணைத்துள்ளதைப் போல் தெரிகிறது.

"பணம் கடல்நீரைப் போன்றது; அதைப் பருகப்பருக இன்னும் கூடுதலாகத் தாகம் எடுக்கும்" என்பது ஓர் உரோமையப் பழமொழி. இந்தப் பழமொழி, அன்று மட்டுமல்ல, இன்றும் நம்மிடையே வாழும் பல செல்வர்களின் நிலையை, பேராசையில் சிக்குண்டிருக்கும் நமது நிலையைப் பரிதாபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
தன்னலக் கனவுகளை ஒவ்வொரு நாளும் பல வண்ணங்களில் உருவாக்கும் திரைப்படங்கள், தொலைகாட்சி, ஊடகங்கள் அனைத்தையும் கனவுத் தொழிற்சாலைகள் என்றழைக்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் வெகு வேகமாக வளர்ந்து வரும் கனவுத் தொழிற்சாலைகள், நம் ஒவ்வொருவரையும் தனித் தனித் தீவுகளாக மாற்றி, அத்தீவுகளில் தன்னலக் கோட்டைகளைக் கட்டும்படி பணிக்கின்றன. தங்கள் கனவுத் தொழிற்சாலைகளின் பொருத்தமான விளம்பரமாக 'அறிவற்ற செல்வனை'ப் பயன்படுத்த இன்றைய வர்த்தக உலகம் வெகுவாக விழையும் என்பதில் ஐயமில்லை.

கனவுத் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தன்னலக் கனவுகளின் தூண்டுதல்களுக்குப் பணிந்துவிடாமல், சமுதாயக் கனவுகளை வளர்க்கும் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் போன்ற ஒப்பற்றத் தலைவர்கள் இன்றும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர். தாங்கள் காணும் கனவுகளை எளிதில் நனவாக்க முடியாத இவர்களில் பலர் தங்கள் உயிரை விலையாகக் கொடுத்துள்ளனர்.
'எனக்கொரு கனவு உண்டு' என்ற புகழ்பெற்ற உரையின் பொன்விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், திருஅவை மற்றுமொரு பொன்விழாவைக் கொண்டாடி வருவதையும் எண்ணிப்பார்க்கலாம். அதுதான், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிகழ்ந்ததன் பொன்விழா ஆண்டு. இப்பொதுச்சங்கத்தில் முக்கிய பங்கேற்றவர்களில் ஒருவர் கர்தினால் Leo Jozef Suenens அவர்கள். இவர், திருஅவையைக் குறித்தும் இவ்வுலகைக் குறித்தும் பல கனவுகள் கண்டவர். கனவுகளைப் பற்றி இவர் சொல்லியிருக்கும் கருத்து இதோ:
"கனவுகள் காண்பதற்கும், அக்கனவுகள் நனவாகத் தேவையான விலையைத் தருவதற்கும் தயாராக இருப்பவர்கள் பேறுபெற்றோர்"

கறுப்பின இசைக் கலைஞரான Charles Albert Tindley என்பவர், 1947ம் ஆண்டு உருவாக்கிய "We Shall Overcome" என்ற பாடல், கறுப்பின மக்களின் விடுதலையைக் கனவு கண்ட அனைவரின் மனதிலும் ஆழமாய் பதிந்த ஒரு பாடலாக மாறியது. "எனக்கொரு கனவு உண்டு" என்று முழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களும் தன் உரைகளில் பயன்படுத்திய பாடல் இது. 'எனக்கொரு கனவு உண்டு' என்ற புகழ்பெற்ற உரையின் பொன்விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், இப்பாடலுடன் நமது தேடலை நாம் இன்று நிறைவு செய்வோம்:
தடைகளை மேற்கொள்வோம்
நாம் ஒருநாள் தடைகளை மேற்கொள்வோம்
என் இதயத்தின் ஆழத்தில் நம்புகிறேன்
நாம் ஒருநாள் தடைகளை மேற்கொள்வோம்
கரம் கோர்த்து ஒருநாள் நடப்போம்
நாம் இனி அஞ்ச மாட்டோம்...
என் இதயத்தின் ஆழத்தில் நம்புகிறேன்
நாம் ஒருநாள் தடைகளை மேற்கொள்வோம்








All the contents on this site are copyrighted ©.