2013-08-27 15:57:32

வருகிற அக்டோபரில், அமேசான் பகுதி குறித்த மாபெரும் கருத்தரங்கு


ஆக.,27,2013. பிரேசில் தலத்திருஅவை மற்றும் அந்நாட்டு நிறுவனங்களின் பணிகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி, பிரேசிலின் அமேசான் பகுதி என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதையடுத்து அமேசான் ஆயர் பேரவை வருகிற அக்டோபரில் பணிஆய்வுக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அமேசான் பகுதியின் பூர்வீக இன மக்கள் மற்றும் அப்பகுதியின் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்குப் பிரேசில் ஆயர்கள் எடுத்துவரும் முயற்சிகளைத் திருத்தந்தை பாராட்டியதோடு, அப்பகுதியின் குருக்களை உருவாக்குவதில் தலத்திருஅவை இதுவரை எட்டியுள்ள பலன்கள் குறித்து சீர்தூக்கிப் பார்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஜூலையில் பிரேசிலுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின்போது இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தையின் வேண்டுகோளுக்கிணங்கி அமேசான் மாநிலத் தலைநகர் Manausல், கர்தினால் Claudio Hummes அவர்கள் தலைமையில் வருகிற அக்டோபர் 28 முதல் 31 வரை இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
2007ம் ஆண்டில் பிரேசிலுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அமேசான் ஆயர் பேரவைக்கு 2 இலட்சம் டாலரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.