2013-08-27 15:49:00

புனித அகுஸ்தீன் துறவு சபைப் பொதுப்பேரவையின் தொடக்க நிகழ்வாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பலி


ஆக.,27,2013. புனித அகுஸ்தீன் துறவு சபையினரின் பொதுப்பேரவையை, திருப்பலி நிகழ்த்தி தொடங்கிவைக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித அகுஸ்தீன் திருவிழாவான இப்புதனன்று உரோம் Campo Marzioவிலுள்ள புனித அகுஸ்தீன் பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்தி புனித அகுஸ்தீன் துறவு சபையினரின் பொதுப்பேரவையை ஆரம்பித்துவைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித அகுஸ்தீன் அவர்களின் அன்னையாகிய புனித மோனிக்காவிடம் திருத்தந்தை பிரான்சிஸ் மிகுந்த பக்தி கொண்டவர் எனவும், திருத்தந்தை, இப்புனிதரின் கல்லறையை அடிக்கடி தரிசித்து செபிப்பது வழக்கம் எனவும் புனித அகுஸ்தீன் துறவு சபையின் கர்தினால் Prospero Grech கூறினார்.
இப்புதனன்று தொடங்கும் புனித அகுஸ்தீன் துறவு சபையின் 184வது பொதுப்பேரவையில் உலகெங்கிலுமிருந்து ஏறக்குறைய நூறு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்பொதுப் பேரவையில் அச்சபையின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தொடக்ககாலக் கிறிஸ்தவ சமூகங்கள் வாழ்ந்த வாழ்வை வாழ்ந்து அதனை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ஹிப்போ நகர் ஆயர் புனித அகுஸ்தீன் அவர்களின் போதனைகளின் அடிப்படையில் 1244ம் ஆண்டு புனித அகுஸ்தீன் துறவு சபை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இச்சபையினர் 5 கண்டங்களின் 50 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.