2013-08-26 16:03:05

வாரம் ஓர் அலசல் – ஒழிப்போம், ஒழிப்போம்,ஒழிப்போம்


ஆக.26,2013. RealAudioMP3 ஒழிப்போம் என்ற சொல்லை கூகுள் இணையதளத்தில் எழுதி கிளிக் செய்த கணநேரத்தில் உலகச் செய்திகள் அடுக்காக வந்து விழுந்தன. பாலியல் வன்கொடுமை ஒழிக! தேவதாசி முறை ஒழிக! முதலாளித்துவ பயங்கரவாதம் ஒழிக! அராஜகம் செய்யும் அரசியல் கட்சி ஒழிக! அணு ஆயுதங்கள் ஒழிக! வேதியத் தாக்குதல்கள் ஒழிக! முதுகு வலி ஒழிக! இப்படிப் பல... இந்தியாவின் மும்பையில் 22 வயது இளம் பத்திரிகை பெண் புகைப்படக்காரர் ஒருவர், கடந்த வியாழன் இரவு ஐந்து பேர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்செயலுக்கு உள்ளாகியுள்ளார். ‘இந்தியாவில் நாளன்றுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். நாட்டின் 21 உயர்நீதிமன்றங்களில் 23,792 பாலியல் வன்செயல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன' என்கிறது ஒரு கணக்கெடுப்பு. பேருந்து, இரயில் பயணங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் நேர்வது பயணத்தின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்ட அளவுக்கு மலிந்து கிடக்கிறது வக்கிரக் கூட்டம்! என ஆதங்கப்படுகிறது மனது. எனவே, நாம் வாழும் பகுதிகளில் பாலியல் வன்கொடுமையை ஒழிப்போம் என நாம் உறுதி எடுப்போமா?
சிரியாவில் கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்றதாகச் சொல்லப்படும் வேதியத் தாக்குதல் அனைத்துலகச் சமுதாயத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சிரியாவின் அரசுப்படைகள் பொதுமக்களுக்கு எதிராக நடத்திய வேதிய ஆயுதத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர் என எதிர்தரப்பு சொல்கிறது. ஆனால், சிரியா அரசு இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதற்கிடையே, தமாஸ்கு நகருக்கு கிழக்கே ஜோபார் என்ற இடத்தில் புரட்சியாளர்கள் பயன்படுத்துகின்ற சுரங்கப்பாதைகளில், ஆயுதமாகப் பயன்படுத்தப்படக்கூடிய வேதியப் பொருள்களை அரசுப்படைகள் கண்டெடுத்துள்ளதாக, சிரியாவின் அரசு தொலைக்காட்சி ஒன்று கூறியுள்ளது. சிரியாவில் வேதிய ஆயுதத் தாக்குதல் தொடர்பாக, அரசும், புரட்சியாளர்களும் ஒருவர் ஒருவரைக் குற்றம் சுமத்திவரும் இவ்வேளையில், இது குறித்த உண்மைநிலையைக் கண்டறிவதற்கு ஆயுதக்களைவு தொடர்பான ஐ.நா.வின் தலைமை அதிகாரி Angela Kane தமாஸ்கு சென்று சிரியா அதிகாரிகளுடன் இஞ்ஞாயிறன்று பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளார். தமாஸ்கு அருகில் வேதிய ஆயுதத் தாக்குதல் நடத்தபட்டதாகக் கூறப்படும் இடங்களுக்குச் செல்ல அனைத்துலகக் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதியையும் அளித்துள்ளது சிரியா அரசு. இத்திங்களன்று ஐ.நா. கண்காணிப்புக் குழு இந்த இடங்களுக்குச் சென்று தனது ஆய்வைத் தொடங்கியுள்ளது. இவ்விடங்களில் இடைக்கால போர்நிறுத்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் வீட்டிலும், நாட்டிலும், எல்லா இடங்களிலும் மோதல்களை ஒழிப்போம் என நாம் உறுதி எடுப்போமா?
இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மூவேளை செப உரையில், சிரியாவில் ஆயுதங்களின் உரத்த ஒலி நிறுத்தப்படட்டும், சகோதரர்களுக்குள் இடம்பெறும் இச்சண்டை நிறுத்தப்படுவதற்கு அனைத்து தரப்பினரும் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடட்டும் என்று விண்ணப்பித்தார். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம், மரணத்தையும் அழிவையும் கொண்டுவரும் சிரியா சண்டை முடிவுக்கு வருவதற்கு அனைத்துலக சமுதாயம் அந்நாட்டின்மீது மிகுந்த அக்கறை காட்டி உதவட்டும் என்று கேட்டுக்கொண்டார். இச்சண்டையில் பலியானவர்கள், இதனால் துன்புறுவோர், குறிப்பாக, சிறாருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் செபத்தையும் தனது இதயத்தின் ஆழத்திலிருந்து தெரிவிப்பதாகக் கூறினார். அங்கு கூடியிருந்த அனைவரையும், சிரியாவில் அமைதி நிலவ அமைதியின் அரசியாம் மரியிடம் செபிக்கச் சொல்லி, எல்லாருடனும் சேர்ந்தும் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
RealAudioMP3 கடந்த வெள்ளிக்கிழமையன்று லெபனன் நாட்டின் Tripoliல் இரு மசூதிகள் குண்டு வைத்து தாக்கப்பட்டதில் 45 பேர் இறந்துள்ளனர் மற்றும் 900 பேர் காயமடைந்துள்ளனர். இதைமுன்னிட்டு அந்நாட்டு அரசு தேசிய அளவில் ஒருநாள் துக்கம் அனுசரித்தது. லெபனனில் 1975ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டுவரை இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டைக்குப் பின்னர் நடந்துள்ள பயங்கரமான தாக்குதல் இது என்று சொல்லப்படுகிறது. Sunni மற்றும் Shia இஸ்லாம் மதப் பிரிவுகளிடையே காணப்படும் பிளவுகள், மத்திய கிழக்குப் பகுதியை அழித்து வருகின்றது என மாரனைட் முதுபெரும் தந்தை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நைஜீரியாவின் Boko Haram என்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்பினர், அந்நாட்டின் Borno மாநிலம், Demba கிராமத்தில், குறைந்தது 35 அப்பாவி பொதுமக்களின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இச்செய்தி கடந்த வெள்ளியன்று வெளியானது. அப்பாவி பொதுமக்கள் இவ்வமைப்புடன் ஒத்துழைக்க மறுத்ததால் இப்படிக் கொலை செய்துள்ளனர். இந்த Boko Haram அமைப்பினர் சிரியா புரட்சியாளர்களுடன் சேர்ந்து சண்டையிடுவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஒன்றரை மாதத்தில், 465 குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்துள்ள தகவல் நலவாழ்வுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அன்பு நேயர்களே, இன்றைய உலகின் அமைதி பல நிலைகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது. உலகில் ஆயுதத் தொழிற்சாலைகளை நடத்திவரும் நாடுகளுக்கு என்றால் உலகின் இன்றைய நிலை ஆதாயமாக இருக்கலாம். அந்நாடுகளின் வங்கிகளில் பணமழை பெய்துகொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் விற்பனை செய்யும் ஆயுதங்களுக்குப் பலியாவது அப்பாவி மக்கள், குழந்தைகள். சிரியாவில் இடம்பெறும் சண்டையில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் புலம்பெயர்ந்துள்ளனர். நாடுகளின் இந்நிலை கண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 64வது பொது அவை, 2009ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதியன்று, அணுஆய்வு முயற்சிகளுக்கு எதிரான அனைத்துலக நாளை உருவாக்கியது. கஜகஸ்தான் நாடும், இன்னும் பல நாடுகளும் முன்வைத்த பரிந்துரையின்படி இந்நாள் ஐ.நா.வில் ஒரேமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கஜகஸ்தானில் Semipalatinsk அணுப்பரிசோதனை இடம் 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி மூடப்பட்டதை நினைவுகூரும் விதமாக, அணுஆய்வு முயற்சிகளுக்கு எதிரான அனைத்துலக நாள் ஆகஸ்ட் 29ம் தேதியன்று ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டு உலகில் அணுஆயுதப்பரவல் தடைசெய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
1945ம் ஆண்டு ஜூலை 16ம் தேதியன்று உலகில் முதல் அணுஆயுத ஆய்வு நடவடிக்கை நடத்தப்பட்டது. அதற்குப்பின்னர் உலகில் இரண்டாயிரத்துக்கு அதிகமான அணுஆயுத ஆய்வு நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன. இவை சுற்றுச்சூழலில் மட்டுமல்லாமல், நாடுகளின் அரசியல் சூழலிலும் நஞ்சைக் கலக்கின்றன. நாடுகளுக்கிடையே நம்பிக்கையின்மை, தனிமை, அச்சம் ஆகியவற்றையும் அதிகப்படுத்துகின்றன. ஆதலால் இந்த அணுஆயுத ஆய்வு முயற்சிகளை உலகில் முழுவதுமாக நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 1996ம் ஆண்டில் அணுஆயுதப் பரிசோதனையைத் தடை செய்யும் அனைத்துலக ஒப்பந்தம்(CTBT) ஒன்று நாடுகளின் கையெழுத்துக்கு வைக்கப்பட்டது. இதில் 183 நாடுகள் கையெழுத்திட்டன. 159 நாடுகள் இதை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆயினும் இவ்வொப்பந்தம் அமலுக்கு வருவதற்கு சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், இஸ்ரேல், வடகொரியா, பாகிஸ்தான், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய 8 நாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனால் இவ்வொப்பந்தம் இன்னும் அமலுக்கு வராமல் இருக்கின்றது.
2013ம் ஆண்டின் அணுஆய்வு முயற்சிகளுக்கு எதிரான அனைத்துலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், இவ்வொப்பந்தம் அமலுக்கு வருவதற்குத் தடையாய் இருக்கும் எட்டு நாடுகள் இதை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுள்ளார். அதேசமயம், நாடுகள் அணுப்பரிசோதனைகளை நிறுத்தி வைக்குமாறும் வலியுறுத்தியுள்ள RealAudioMP3 ார். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 67வது பொது அவைத் தலைவரான Vuk Jeremicம், அணுஆய்வு முயற்சிகளுக்கு எதிரான அனைத்துலக நாளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு, இவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுள்ளார். உலகில் அணுஆய்வு முயற்சிகள் ஒழிக்கப்படட்டும் என நாமும் குரல் எழுப்புவோம்.
அன்பு நேயர்களே, அமெரிக்க ஐக்கிய நாட்டின் 16வது அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்களின் அடிமை ஒழிப்புச் சட்டம் அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு, இந்த 2013ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுகின்றது. ஏறக்குறைய 400 ஆண்டுகளாக இடம்பெற்ற அடிமைத்தனமும் அட்லாண்டிக் பெருங்கடல் அடிமை வியாபாரமும் ஒழிக்கப்படுவதற்கு இச்சட்டம் உதவியது. அட்லாண்டிக் பெருங்கடல் அடிமைவியாபாரத்தில் ஒரு கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகினர். அதன்பின்விளைவுகள் இக்காலத்திலும் எதிரொலிக்கின்றன. அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் அடிமை வியாபாரத்துக்குப் பலியானவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாள் கடந்த வெள்ளிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது. இன்றும் உலகில், நவீன அடிமைத்தனம் என்ற பாலியல் வியாபாரத்தில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 20 இலட்சம் பேர் கட்டாயமாக நுழைக்கப்படுகின்றனர். இவர்களில் 60 விழுக்காட்டினர் சிறுமிகள். 2 கோடியே 90 இலட்சம் பேர் கட்டாயத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என, 2012ம் ஆண்டின் ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஒரு மைதானத்தின் இரு பக்கங்களிலும் புல்லும் கொள்ளும் பச்சைப் பசேலென்று செழித்திருந்தன. அன்று அங்கு குதிரை ஓட்டப்பந்தயம் தொடங்கியது. அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒன்று, மற்றோர் ஆட்டைப் பார்த்து, இந்தக் குதிரைகள் கொள்ளையோ புல்லையோ கொஞ்சம்கூடத் திரும்பிப் பார்க்காமல் ஓடுகின்றனவே, உனக்கு இது வியப்பாக இல்லையா என்று கேட்டது. அதற்கு அந்த மற்றோர் ஆடு, போட்டிக் குதிரைகள் அப்படித்தான் செயல்படும். வெல்லப்பாயும் குதிரை புல்லைப் பார்க்குமா, கொள்ளைப் பார்க்குமா என்று சொன்னது. ஈழக் கவிஞர் காசி ஆனந்தன் சொன்ன இக்கூற்றுப் போன்று, அன்புள்ளங்களே, நமது இலட்சியங்களும் செயல்பாடுகளும் அமைய வேண்டும். வெற்றிக்கான உனது சொந்தத் தீர்மானமே மற்ற அனைத்தையும்விட மிக முக்கியமானது. உனது காலை சரியான இடத்தில் வைத்துள்ளாய் என்பது நிச்சயமானபின் அதில் உறுதியாய் இரு என்று சொன்னார் ஆபிரகாம் லிங்கன். ஆம். எம் இனிய வ.வானொலி நேயர்களே, நாம் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும், எப்படி வாழ்ந்தோம் என்பது முக்கியம் என்பதை உணர்ந்து செயல்வீரர்களாக, தனிப்பட்ட வாழ்விலும், பொதுவாழ்விலும் ஒழிக்க வேண்டியவைகளை ஒழிப்பதற்குத் துணிந்து நிற்போம்.








All the contents on this site are copyrighted ©.