2013-08-26 16:27:09

திருத்தந்தை : அன்புவழி வாழ்வதும், நீதியை நிலைநாட்டுவதுமே கிறிஸ்தவ வாழ்வுக்கான அடிப்படைச் சான்றுகள்


ஆக.26,2013. அன்பு வழி வாழ்வதும், நீதியை நிலைநாட்டுவதுமே கிறிஸ்தவ வாழ்வுக்கான அடிப்படைச் சான்றுகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை வாசகங்களுக்கு விளக்கமளித்த திருத்தந்தை அவர்கள், இயேசுவே நிலைவாழ்வுக்கான வாயில், அவரே நம்மை தந்தையிடம் அழைத்துச் செல்பவர் என்று கூறியதுடன், நாம் பாவிகள் என்பதனால் அவர் நம்மை வெறுப்பதும் இல்லை, விலக்குவதும் இல்லை, மாறாக, அவர் எப்பொழுதும் எல்லாருக்கும் வாயிலைத் திறந்தே வைத்திருக்கிறார் எனவும் எடுத்துரைத்தார்.
இயேசு இடுக்கமான வாயிலாக இருக்கிறார், ஆனால் அது கொடுமைகளைக் கொடுக்கின்ற அறையின் கதவுகள் போன்றது அல்ல. மாறாக, அது நம் இதயங்களை அவருக்காக திறக்கவும்,. நாம் பாவிகள் என்று உணரவும், நமக்கு அவரின் விடுதலை, அன்பு, தேவை என்பதை உணரவும், மனத்தாழ்ச்சியோடு அவரின் இறை இரக்கத்தை பெற்றுக்கொள்ளவும் அதன் வழியாக அவரில் புது பிறப்படையவும் நம்மை அழைக்கின்ற வாயில் என்று கூறினார் திருத்தந்தை.
இவ்வுலகில் நிலையற்ற அமைதியைக் கொடுக்கின்ற, நம்முடைய சுயநலத்தையும், குறுகிய மனப்பான்மையையும், பாகுபாடுகளையும் களைந்து, நிலையான அமைதியைக் கொடுக்கும் இயேசுவை நம்மில் ஏற்றுக்கொள்வோம், அவர் நம் வாழ்க்கை முழுவதையும் ஒளிர்விப்பார். அவர் கொடுக்கின்ற ஒளி வாணவேடிக்கையின் ஒளியைப் போன்றது அல்ல, மாறாக மனதிற்கு அமைதியையும், நிம்மதியையும் கொடுக்கின்ற ஒளி என்று கூறினார்.
மேலும் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நம்மை வெளிப்படுத்துகின்ற ‘முத்திரை’ அல்ல, மாறாக, விசுவாசத்தின் வாயிலாக உண்மைக்கு சாட்சியம் கூறுகின்ற வாழ்க்கை என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.