2013-08-26 16:36:01

சிரியாவில் புலம் பெயர்ந்தோர் மத்தியில் பாதிபேர் குழந்தைகள்


ஆக.26,2013. சிரியாவில் மோதல்களால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தோர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பாலகர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்வாறு புலம் பெயர்ந்தோர் நிலைக்கு உள்ளான குழந்தைகளுள் 7இலட்சத்து 40 ஆயிரம் பேர், 11 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வித முடிவும் தெரியாமல் கடந்த இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மோதல்களால் குழந்தைகளும் பெருமெண்ணிக்கையில் புலம் பெயர்ந்தோர் நிலைக்கு உள்ளாகியிருப்பது கவலை தருவதாக உள்ளது என்கிறது Catholic Online என்ற செய்தி நிறுவனம்.
சிரியாவிலிருந்து வெளியேறி, தங்களை புலம் பெயர்ந்தோராக பதிவுச்செய்திருப்போருள் பாதிபேர் குழந்தைகள் எனக்கூறும் இக்கத்தோலிக்கசெய்தி நிறுவனம், மனதளவில் இக்குழந்தைகள் பெருமளவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.
பாலர் தொழிலாளர் முறை, பாலர் திருமணம், பாலினவகை வன்கொடுமை போன்ற ஆபத்துக்களையும் இக்குழந்தைகள் எதிர்நோக்குவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவின் உள்நாட்டு மோதல்களில் உயிரிழந்ததுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டுள்ளோருள் ஏறத்தாழ 7,000 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Catholic Online








All the contents on this site are copyrighted ©.