2013-08-24 15:54:29

மியான்மார் கத்தோலிக்கர் : சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு மத சுதந்திரமும் இனங்களுக்கிடையே அமைதியும் அடித்தளங்கள்


ஆக.,24,2013. மியான்மார் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சி, தனிமனிதச் சுதந்திரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று யாங்கூன் பேராயர் உள்ளிட்ட அந்நாட்டின் கத்தோலிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
யாங்கூன் பேராயர் Charles Bo, உலகளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டுக் கழகத்தின்(CSW) உறுப்பினர் Benedict Rogers ஆகிய இருவரும் இணைந்து, மியான்மாரின் இன்றைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், அந்நாட்டில் உண்மையான அமைதி ஏற்படுவதற்கு பல்வேறு இன மற்றும் மதங்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.
2012ம் ஆண்டில் ரக்கின் மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை தொடங்கியதிலிருந்து முஸ்லீம்களுக்கு எதிரானப் பிரச்சாரமும் வன்முறையும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், கச்சின் மாநிலத்தில் தற்போது இடம்பெற்றுவரும் சண்டை உடனடியாக நிறுத்தப்பட்டு, கச்சின் சுதந்திர நிறுவனத்தோடு(KIO) உரையாடல் தொடங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளனர்.
ரக்கின் மாநிலத்தில் இடம்பெயர்ந்துள்ள 1,30,000 முஸ்லீம்கள் கொடூரமான சூழலில் வாழ்வதாகவும், அவர்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டுமெனவும் அக்கத்தோலிக்கத் தலைவர்கள் கேட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides/AsiaNews







All the contents on this site are copyrighted ©.