2013-08-24 16:00:05

புலம்பெயர்ந்த இலங்கை மக்களை ஆஸ்திரேலியா தடுத்து வைத்தது கொடூரச் செயல்: ஐநா


ஆக.,24,2013. புலம்பெயர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் 46 பேரை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆஸ்திரேலியா காலவரையின்றி தடுத்து வைத்திருப்பது, கொடூரமான, மனிதத் தன்மையற்ற மற்றும் இழிவுபடுத்தும் விதமான செயல் என்று ஐ.நா. குறைகூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் இச்செயல் காரணமாக தடுத்துவைக்கப்பட்டவர்கள் கடுமையான உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று இவர்களது வழக்குகளை ஆய்வுசெய்த ஐ.நா. குழுவொன்று கண்டறிந்துள்ளது.
குறைந்தது இரண்டரை ஆண்டுகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர்களை ஆஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்களுக்கு இழப்பீடும், புனர்வாழ்வும் அளிக்க வேண்டும் என ஜெனீவாவிலிருந்து இயங்கும் மனித உரிமைகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் 42 பேர், மியான்மாரின் ரோஹிஞ்சாக்கள் 3 பேர், குவைத் குடிமகன் ஒருவர் என இந்த 46 பேர் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஐநா மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருந்தனர்.
மேலும், தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஆஸ்திரேலிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர, தங்களுக்கு வழியில்லாமல் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.