2013-08-24 15:48:04

கர்தினால் Tauran : மத சுதந்திரம் இன்றி மனிதர் ஒரு வியாபாரப் பொருளாக மாறுகின்றார்


ஆக.,24,2013. மத சுதந்திரம் இன்றி மனிதர் ஒரு வியாபாரப் பொருளாக மாறுகின்றார் என்று, இத்தாலியின் ரிமினி நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் கூறினார் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran.
இம்மாதம் 18ம் தேதி முதல் நடைபெற்ற ஒரு வாரக் கூட்டத்தில் இவ்வெள்ளிக்கிழமை மாலை உரையாற்றிய கர்தினால் Tauran, மத சுதந்திரம் பற்றிப் பேசும்போது மதத்தைப் பற்றி நாம் பேசவில்லை, மாறாக, அனைத்துலக அளவில் தெளிவாக விளக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை பற்றிப் பேசுகிறோம் என்று கூறினார்.
ஒரு நாடோ அல்லது ஓர் அரசோ தனது குடிமக்களுக்கு நன்மனத்தின் அடிப்படையில் தாராளமாக வழங்குவது அல்ல மத சுதந்திரம் என்று விளக்கிய கர்தினால் Tauran, சமய சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் உரியது, அவர் அதைத் தனது தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும், பிறரது உரிமைகளைப் பாதிக்காத வகையில் தனியாகவோ அல்லது குழுவாகவோ கடைப்பிடிக்கிறார் என்று கூறினார்.
மத சுதந்திரம் மனிதரின் அடிப்படை உரிமை எனவும், இது, மனிதர் இறைவனோடு ஆள்-ஆள் உறவு கொள்வதற்கும், மனிதர் தனது இறை நம்பிக்கையை பொதுவில் சுதந்திரமாக அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தவுமான சுதந்திரம் எனவும் கூறினார் கர்தினால் Tauran.
கடந்த ஞாயிறன்று தொடங்கிய ரிமினி கூட்டம் இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது. மக்கள் மத்தியில் நட்பை வளர்ப்பதற்கென 1980ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இக்கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த பல்சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என, பல முக்கிய தலைவர்கள் தங்களின் விசுவாச அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.