2013-08-23 15:47:27

நவீன அடிமைத்தனம் ஒழிக்கப்பட ஐ.நா. பொதுச்செயலர் அழைப்பு


ஆக.,23,2013. இன்றைய நமது உலகில் நிலவும் அடிமைத்தனம் களையப்படவும், மனித வியாபாரத்துக்குப் பலியானவர்களின் மாண்பு மதிக்கப்படவுமான நடவடிக்கைகளில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் அடிமை வியாபாரத்துக்குப் பலியானவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாளான இவ்வெள்ளிக்கிழமையன்று இவ்வாறு கேட்டுள்ளார் பான் கி மூன்.
இந்த அனைத்துலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இலட்சக்கணக்கான ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட உதவிய ஆபிரகாம் லிங்கன் அவர்களின் அடிமை ஒழிப்புச் சட்டம் அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு, இந்த 2013ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஏறக்குறைய 400 ஆண்டுகளாக இடம்பெற்ற அட்லாண்டிக் பெருங்கடல் அடிமைவியாபாரத்தில் ஒரு கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் எனவும், இந்த அடிமைத்தனத்தின் பாதிப்பு இன்றும் இருக்கின்றது என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.
170 ஆண்டுகளுக்கு முன்னர் கானடா, பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நன்னம்பிக்கை முனையிலும், 165 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சிலும், 160 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ஜென்டினாவிலும், 150 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் டச்சு காலனிகளிலும், 125 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலிலும் அடிமைவியாபாரம் ஒழிக்கப்பட்டது இவ்வாண்டில் நாம் நினைவுகூருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1791ம் ஆண்டு ஆகஸ்ட் 22க்கும் 23க்கும் இடைப்பட்ட இரவில் Santo Domingoவில்(தற்போதைய Haiti மற்றும் Dominican Republic இருக்குமிடம்) முதன் முதலாக அடிமை வியாபாரத்துக்கு எதிரான கிளர்ச்சி எழுந்தது. இதைமுன்னிட்டு, அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் அடிமைவியாபாரத்துக்குப் பலியானவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 23ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.