2013-08-21 16:33:27

இளையோர் என்ற நிலத்தை, பெரும் அறுவடைக்கு ஏற்ற நிலமாக திருத்தந்தை மாற்றியுள்ளார் - கர்தினால் Turkson


ஆக.21,2013. உலக இளையோர் நாளையொட்டி, ரியோ தெ ஜனெய்ரொ நகரில் கூடியிருந்த இளையோர் என்ற நிலத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பிரசன்னத்தாலும், உரைகளாலும் தகுந்த முறையில் பண்படுத்தி, பெரும் அறுவடைக்கு ஏற்ற நிலமாக மாற்றியுள்ளார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நீதி மற்றும் அமைதி திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Peter Turkson அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின்போது தான் அடைந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
'விளம்பரம்' என்ற வார்த்தை நமக்குள் சரியான எண்ணங்களை உருவாக்குவது இல்லையெனினும், அந்த வார்த்தைக்குப் பின் பொதிந்துள்ள 'அறிவித்தல்' என்ற எண்ணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோர் உள்ளங்களில் ஆழப்பதித்துள்ளார் என்பதை உணர முடிகிறது என்று கூறினார் கர்தினால் Turkson.
மழை, காற்று, குளிர் என்ற இயற்கை இடையூறுகளையும், வசதிகள் குறைவு என்ற நிலையையும் பொருட்படுத்தாமல் திருத்தந்தையைச் சந்திக்க இளையோர் கூடியிருந்தது, நம்பிக்கையற்ற இந்த உலகில் நம்பிக்கை தரும் அடையாளங்களாக இருந்தன என்று கர்தினால் Turkson தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
இளையோர் தகுந்த முறையில் வளர்வதற்கு உரிய சூழலை உருவாக்குவது வயதில் முதிர்ந்தவர்களின் கடமை என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தது உலகிற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சவால் என்றும் கர்தினால் Turkson கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.