2013-08-21 16:33:47

ஆஸ்திரேலியத் தலத்திருஅவை கொண்டாடிவரும் புலம்பெயர்ந்தோர் வாரம்


ஆக.21,2013. ஆகஸ்ட் 19, இத்திங்கள் முதல் 25, வருகிற ஞாயிறு முடிய புலம்பெயர்ந்தோர் வாரத்தை ஆஸ்திரேலியத் தலத்திருஅவை கொண்டாடிவருகிறது.
"புலம்பெயர்தல்: நம்பிக்கை, எதிர்நோக்கு இவற்றின் திருப்பயணம்" என்ற தலைப்பில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் புலம்பெயர்ந்தோர் வாரத்திற்கென சென்ற ஆண்டு வெளியிட்ட செய்தியினை மையப்படுத்தி இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.
நாடுவிட்டு நாடு பயணம் மேற்கொள்வோரும், புலம்பெயர்வோரும் தங்கள் பயணங்களை மேற்கொள்ளும்போது, இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டே செல்கின்றனர்; குறிப்பாக, புலம்பெயர்ந்தோர் மீண்டும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையிலேயே தங்கள் பயணத்தை மேற்கொள்ளத் துணிகின்றனர் என்று ஆஸ்திரேலிய புலம்பெயர்ந்தோர் பணி இயக்குனரான ஆயர் Gerard Hanna அவர்கள், Zenit செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
1914ம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் உலக நாளை திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் அவர்கள் நிறுவியதைத் தொடர்ந்து, இவ்வாண்டு 99வது புலம்பெயர்ந்தோர் உலக நாள் ஆகஸ்ட் 25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.