2013-08-20 15:23:32

விவிலியத்
தேடல் அறிவற்ற செல்வன் உவமை பகுதி 2


RealAudioMP3 ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இரண்டாம் லூட்விக் (Ludwig II) என்ற மன்னரைப் பற்றி அண்மையில் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. திருமணம் ஆகாமல், தனித்து வாழ்ந்த இவர், Bavariaவின் மன்னராக 20 ஆண்டுகள் ஆட்சிசெய்தார். தனது 41வது வயதில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். 'கற்பனைக் கதை மன்னன்' (Fairy tale king) என்று அழைக்கப்படும் இவர், என் கவனத்தை ஈர்த்ததற்கு ஒரு முக்கிய காரணம், இவருக்குத் தரப்பட்டுள்ள மற்றொரு பட்டப்பெயர். இவர் 'மதியற்ற மன்னன் லூட்விக்' (Mad King Ludwig) என்றும் அழைக்கப்படுகிறார். செல்வம் மிகுந்துவிட்டால், மதியற்ற செயல்களில் மனிதர்கள் ஈடுபடத் துணிகின்றனர் என்பதற்கு, இரண்டாம் லூட்விக் ஓர் எடுத்துக்காட்டு.
ஜெர்மன் நாட்டில் உள்ள மிகப்பெரும் ஏரிகளில் ஒன்றான, Chiemsee ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறு தீவில் இரண்டாம் லூட்விக் ஒரு பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்ட ஆணையிட்டார். 70 அறைகள் கொண்ட இந்த அரண்மனையின் ஒரு சில அறைகள் கட்டப்பட்டதும், 1885ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு சில நாட்களே இந்த அரண்மனையில் தங்கினார். இவர் இங்கு தங்கியிருந்தபோது, யாரையும் சந்திக்கவில்லை. இவருக்கென தயாரிக்கப்பட்ட உணவு, ஓர் இயந்திரத்தின் வழியாக இவரது அறைக்கு அனுப்பப்பட்டது. இவர் அங்கு தங்கியிருந்த அறைகளில் பிரம்மாண்டமான கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த ஏற்பாடுகளையெல்லாம் காணும்போது, மனதில் ஓர் எண்ணம் எழுகின்றது. மன்னன் இரண்டாம் லூட்விக், வேறு மனிதப் பிறவிகள் யாரையும் சந்திக்க விரும்பாமல், தன்னை மட்டுமே நாள் முழுவதும் பார்த்தவண்ணம் அந்த அரண்மனையில் வாழ்ந்திருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்வதற்கு அவர் 70 அறைகள் கொண்ட ஓர் அரண்மனையைக் கட்ட விழைந்தார் என்பதை எண்ணும்போது, இவர் தன் சுய அறிவுடன்தான் செயல்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது.
70 அறைகள் கொண்ட இந்த அரண்மனையில் 30 அறைகளே கட்டி முடிக்கப்பட்ட நேரத்தில் இவர் இறந்தார். அதன்பின்னர் இந்த அரண்மனை கட்டப்படாமலே விடப்பட்டது. தற்போது இந்த அரண்மனை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு கண்காட்சிப் பொருளாக அமைந்துள்ளது. முழுமை பெறாத இந்த அரண்மனையைச் சுற்றிவரும்போது, இங்கு ஒரு மன்னன் தனிமையில் தன்னையேச் சுற்றிச்சுற்றி வந்தார் என்று எண்ணி, அவர் மீது பரிதாபம் எழுகிறது.

மன்னன் லூட்விக் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வினோத மனிதர். நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும் இத்தகைய வினோதமான செயல்களில் ஈடுபடும் செல்வந்தர்களைச் சந்திக்கமுடிகிறது. 2010ம் ஆண்டு மும்பை மாநகரில் கட்டி முடிக்கப்பட்ட ஓர் இல்லம் என் நினைவில் இப்போது வந்து மோதி, வேதனையைத் தருகிறது. உலகிலேயே மிக விலையுயர்ந்த வீடு என்று கருதப்படும் இந்த அடுக்குமாடி அரண்மனையில் மிக அதிக செல்வம் உடையவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் முகேஷ் அம்பானியின் குடும்பம் வாழ்கிறது. இந்த இல்லத்தின் பெயர் அன்டில்லா (Antilla).
'அன்டில்லா' என்பது கிரேக்கப் புராணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கனவுத் தீவு. மும்பை நகரில் அமைந்துள்ள 'அன்டில்லா' இல்லமும் ஒரு தீவுதான். வாழ்வதற்குத் தகுதியான, சுத்தமான ஒரு சதுர அடி இடம் கிடைப்பதற்குப் போராடிவரும் 180 இலட்சம் மக்கள் நிறைந்த ஒரு மனிதக் கடல், மும்பை மாநகரம். இக்கடலின் நடுவே, ஐந்துபேர் வாழ்வதற்கு 6 இலட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இல்லம் ஒன்று அமைந்திருப்பது உண்மையிலேயே ஒரு தீவுதான். இந்தத் தீவு கட்டப்பட்டுள்ள அந்த நிலப்பரப்பு, Currimbhoy Orphanage Trust என்ற ஓர் அறக்கட்டளைக்கு, அநாதை இல்லம் கட்டுவதற்கென்று வழங்கப்பட்ட நிலம் என்று கேள்விப்படும்போது நமது உள்ளம் இன்னும் அதிக வேதனை அடைகிறது. ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்கள், அதாவது, 9,000 கோடி ரூபாய் செலவில் இந்த தற்கால அரண்மனையைக் கட்டியவர் சுய அறிவுடன்தான் செயல்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

மன்னன் இரண்டாம் லூட்விக்கும், மும்பைச் செல்வந்தர் முகேஷ் அம்பானியும் சராசரி மனிதர்கள் நடுவிலிருந்து தனியே பிரிந்து காணப்படும் வினோத மனிதர்கள் என்று சமாதானம் சொல்லி, நாம் இந்தப் பிரச்சனையைத் தட்டிக் கழிக்கமுடியாது. ஏனெனில், பெரும்பாலான செல்வந்தர்கள் வெவ்வேறு வழிகளில் வினோதமாகச் செயல்படுவதையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டு வருகிறோம். தானும், தங்கள் குடும்பமும் செல்வங்களால் சூழப்பட்டால் போதும், வேறு மனிதர்கள் இருந்தாலும், இல்லையெனினும் ஓன்றுதான் என்ற அளவில் வாழ்வது செல்வர்களின் பொதுவான வாழ்வு முறையோ என்று எண்ணத்தோன்றுகிறது.
தான் மட்டும் தனித்து வாழ்வதற்கு 70 அறைகள் கொண்ட ஓர் அரண்மனையைக் கட்டினால், தன் வாழ்வு நிறைவடையும் என்று எண்ணிய இரண்டாம் லூட்விக் மன்னரையும், உலகிலேயே மிக விலையுயர்ந்த இல்லம் தனக்குச் சொந்தம் என்பதை உலகறியச் செய்தால், தன் வாழ்வின் குறிக்கோள் நிறைவுறும் என்று எண்ணிய முகேஷ் அம்பானி போன்றவர்களையும் முன்னிறுத்தி, லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் இயேசு நமக்கு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்:
லூக்கா 12: 15
இயேசு அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாதுஎன்றார்.
இந்த எச்சரிக்கையை நம் உள்ளங்களில் தெளிவாகப் பதிக்க இயேசு கூறும் அழகான உவமையே 'அறிவற்ற செல்வன்' உவமை. இந்த உவமைக்குச் செவிமடுப்போம்:
லூக்கா 12: 16-21
அவர்களுக்கு இயேசு ஓர் உவமையைச் சொன்னார்: செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!என்று எண்ணினான்.ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’. பின்பு, “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.

'செல்வந்தர் ஒருவர்' என்ற வார்த்தைகளுடன் இயேசு கூறிய மூன்று உவமைகள் லூக்கா நற்செய்தியில் 12 மற்றும் 16ம் பிரிவுகளில் உள்ளன. இம்மூன்று உவமைகளில் இச்செல்வந்தர்களை இயேசு அறிமுகப்படுத்தும் வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சில எண்ணங்கள் உள்ளத்தில் எழுகின்றன. இதோ, இம்மூன்று உவமைகளின் அறிமுக வரிகள்:
லூக்கா 12: 16
செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
லூக்கா 16: 1
செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.
லூக்கா 16: 19-20
செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.

இம்மூன்று உவமைகளில், 16ம் பிரிவில் இயேசு அறிமுகப்படுத்தும் இரு செல்வந்தர்களுடன் மனித வடிவில் மற்றொரு கதாப்பாத்திரமும் அறிமுகமாகின்றார். ஆனால், நாம் தற்போது சிந்திக்கும் 'அறிவற்றச் செல்வன்' உவமையில், வேறு மனிதர் யாரும் உவமையில் பேசப்படவில்லை. இச்செல்வனுடன் சித்திரிக்கப்பட்டுள்ளதெல்லாம் அவரது நிலம், விளைபொருள்கள் மற்றும் களஞ்சியங்கள்.
எதார்த்தமாக சிந்தித்துப் பார்த்தால், அந்தச் செல்வனைச் சுற்றி ஒரு குடும்பம் இருந்திருக்க வேண்டும். அவரது நிலத்தில் உழைத்த உழைப்பாளிகள் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், வேறு எவ்வித மனித உறவும் இல்லாமல், பொருள்களால் மட்டுமே சூழப்பட்ட தனியொரு தீவாக இச்செல்வனை இயேசு சித்திரித்துள்ளார். இவ்வுவமையை இன்னும் ஆழமாக ஆய்வு செய்யும்போது, அத்தகைய ஒரு தீவை இச்செல்வன் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டார் என்பதை உணரலாம்.

இச்செல்வனை இயேசு அறிமுகப்படுத்தும் வரிகளில் நம் ஆய்வைத் துவக்குகிறோம். "செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது" என்ற அறிமுக வார்த்தைகள் பொருள் நிறைந்ததாக உள்ளன. 'செல்வனாயிருந்த ஒருவன்' என்ற சொற்கள், பல தலைமுறைகளாகச் செல்வத்தில் வளர்ந்தவராக இச்செல்வனைக் காட்டுகின்றன. இவர் பல தலைமுறைகள் செல்வத்தில் வாழ காரணமாய் அமைந்தது, அவரிடம் இருந்த நிலம், அந்நிலத்தின் விளைபொருள்கள். பல தலைமுறைகள் வழியே வந்துசேர்ந்த செல்வம், நன்கு விளையும் நிலம்... இவை இரண்டும் இச்செல்வனுக்குத் தரப்பட்ட பரிசுகள். அவர் எவ்வகையிலும் உழைக்காமல் அவரை வந்தடைந்த பரிசுகள்.
பாரம்பரியமாக செல்வனை வந்தடைந்த அந்த 'நிலம் நன்கு விளைந்ததாக' இயேசு குறிப்பிட்டுள்ளார். நல்லதொரு விளைச்சலுக்கு, பல காரணங்கள் உள்ளன. இறைவன் கருணை காட்டியது, இயற்கை பொய்க்காமல் இருந்தது, பல உழைப்பாளிகள் தங்கள் வியர்வை சிந்தி உழைத்தது என்று பல பின்னணி காரணங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம். இக்காரணங்கள் இணைந்து, இச்செல்வனை இதுவரை வாழவைத்து வந்தன.
இக்காரணங்கள் எதுவும் செல்வனின் எண்ணத்தில் கடுகளவும் தோன்றவில்லை. அவர் சிந்தனையை நிறைத்ததெல்லாம் அவர் களஞ்சியங்களில் குவிக்கப்பட்டிருந்த விளைபொருள்கள் மட்டுமே. அவரது களஞ்சியங்களின் கூரைமட்டும் விளைபொருள்கள் நிறைந்திருந்ததால், இச்செல்வனின் பார்வையை விளைபொருள்களும், அவற்றைத் தாங்க முடியாமல் தவித்த களஞ்சியங்களும் மட்டுமே நிறைத்திருந்தன.
அவர் சிறிது முயற்சி எடுத்திருந்தால், அந்தக் குவியல்களின் பின்னணியில், தூரத்தில், அறுவடை செய்யப்பட்ட நிலம் அவர் கண்களில் பட்டிருக்கும். அந்த அறுவடையைச் செய்த உழைப்பாளிகள் அவர் கண்களில் பட்டிருப்பர். இந்நிலத்தை அவருக்கு வழங்கிய அவரது முன்னோர் அவர் மனக்கண்களில் தோன்றியிருப்பர்.
இவ்வகை முயற்சிகள் எதுவும் எடுக்காமல், இச்செல்வனின் மனதில் தோன்றிய முதல் எண்ணங்கள், கவலைகள் இவ்வுவமையில் இவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளன:
லூக்கா 12: 17
செல்வன் "நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!" என்று எண்ணினான்.
செல்வன் தனக்குள் எழுப்பிய கேள்விகளையும், அவற்றிற்கு அவர் தந்த பதில்களையும் அடுத்தத் தேடலில் சிந்திக்க முயல்வோம்.








All the contents on this site are copyrighted ©.