2013-08-20 16:24:57

மனநலவாழ்வுக்கு உதவும் ஐ.நா.வின் புதிய அறிக்கை


ஆக.,20,2013. மனிதாபிமான அவசரகால நெருக்கடிகளுக்குப்பின் ஏற்படும் மனநலவாழ்வு பாதிப்புக்களைச் சரிசெய்வதற்கென நாடுகள் தங்களின் மனநலவாழ்வு பராமரிப்பு மையங்களை வலுப்படுத்துவதற்கு வாய்ப்புக்களை வழங்கும் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.
“மீண்டும் நல்லதோர் வாழ்வை அமைக்க: அவசரகால நெருக்கடிகளுக்குப்பின் உறுதியான மனநலவாழ்வு பராமரிப்பு” என்ற தலைப்பில், அனைத்துலக மனிதாபிமான நாளை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மனநலவாழ்வு அமைப்புகளை வலுபடுத்துவதற்கான வழிமுறைகளைக் கொடுத்துள்ள அவ்வறிக்கை, பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் முறைகளையும் எடுத்துக்காட்டுகளாகக் கொடுத்துள்ளது.
உலக நலவாழ்வு அமைப்பின் இணைஇயக்குனர் Bruce Aylward அவர்கள் இது பற்றிக் கூறுகையில், நெருக்கடி நிலைகள் சோகமான இயல்பைக் கொண்டிருந்தாலும், அவை, மனநலவாழ்வு அமைப்புகளை மேம்படுத்துவதன்மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளாகவும் அமைகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2013ம் ஆண்டில் மனிதாபிமான நெருக்கடிகளைச் சந்தித்த மாலி, சிரியா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகளின் அரசுகள் தங்கள் மனநலவாழ்வு அமைப்புகளை மாற்றுவதன் மூலம் தனிமனித நலனையும் சமுதாய நலனையும் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக மனிதாபிமான நாள் ஆகஸ்டு 19ம் தேதி, இத்திங்களன்று கொண்டாடப்பட்டது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.