2013-08-20 16:11:02

திருத்தந்தை பிரான்சிஸ் : ஹங்கேரி நாட்டின் ஆன்மீகப் பாரம்பரியச் சொத்து வருங்கால அமைதிக்கு வழி அமைக்கட்டும்


ஆக.,20,2013. ஹங்கேரி நாட்டு மக்கள், அமைதியும் சகோதரத்துவமும் நிறைந்த ஓர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அறநெறி வளங்களைத் தங்களின் மனித மற்றும் ஆன்மீகப் பாரம்பரியச் செல்வங்களில் கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஹங்கேரி நாட்டுப் பாதுகாவலரான ஸ்தேவான் எனப்படும் புனித ஸ்டீபன் தேசிய விழாவுக்கென அந்நாட்டு அரசுத்தலைவர் János Áder அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 20, இச்செவ்வாயன்று ஹங்கேரி நாட்டில் புனித ஸ்டீபன் விழா சிறப்பிக்கப்பட்டது. ஹங்கேரியின் முதல் அரசரும், அந்நாட்டை உருவாக்கியவருமான ஸ்டீபன், கிறிஸ்தவத்துக்கு மனம் மாறியதைத் தொடர்ந்து அந்நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. 1083ம் ஆண்டில் திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள், அரசர் ஸ்டீபன் அவர்களைப் புனிதர் என அறிவித்தார். இப்புனிதரின் விழா ஹங்கேரியில் தேசிய விழாவாகச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட் புனித ஸ்டீபன் பசிலிக்கா வளாகத்தில் இச்செவ்வாயன்று இவ்விழாத் திருப்பலியை நிகழ்த்தினார் அந்நாட்டின் முதுபெரும் தந்தை கர்தினால் Péter Erdő.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.