2013-08-20 16:20:45

இரு கொரிய நாடுகளுக்கு இடையே ஒப்புரவு ஏற்பட அன்னை மரியிடம் செபிப்போம், செயோல் பேராயர்


ஆக.,20,2013. கொரியப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட பிரிவினையில் பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு வட மற்றும் தென் கொரிய நாடுகள் இசைவுதெரிவித்துள்ள இவ்வேளையில், இவ்விரு கொரிய நாடுகளுக்கு இடையே ஒப்புரவு ஏற்பட அன்னை மரியிடம் செபிப்போம் என்று கூறியுள்ளார் செயோல் பேராயர் Andrew Yeom Soo-jung.
இரு கொரிய நாடுகளுக்கு இடையே ஒப்புரவு ஏற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ள பேராயர் Yeom Soo-jung அவர்கள், கொரியத் தீபகற்பத்தின் அமைதிக்கான முயற்சிகளை அன்னை மரியிடம் அர்ப்பணிப்போம் என்று கூறியுள்ளார்.
தென் கொரியா, ஆகஸ்ட் 15ம் தேதி தனது சுதந்திர தினத்தைச் சிறப்பித்ததையொட்டி இச்செய்தியை Fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் செயோல் பேராயர் Yeom Soo-jung.
இரண்டாம் உலகப்போரின்போது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஜப்பான் சரணடைவதாக அறிவித்ததையொட்டி, தென் கொரியா அதேநாளில் ஜப்பானிய பேரரசின் ஆதிக்கத்திடமிருந்து விடுதலை பெற்றது.
பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு இரு கொரிய நாடுகளும் முயற்சித்துவரும் இவ்வேளையில், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே இடம்பெறும் ஒன்றிணைந்த இராணுவப் பயிற்சிகள் பதட்டநிலைக்கு எரிபொருள் போடுவதாக இருக்கின்றன எனக் கருதப்படுகின்றது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.