2013-08-19 16:11:20

பெண் சிசுக்கொலை தடுப்பு மற்றும் நலமான பிரச்சனையற்ற மகப்பேறு குறித்த விழிப்புணர்வு


ஆக.19,2013. இந்தியாவில் 2 கோடியே 70 இலட்சம் பெண்களுக்கு, 27,000 மகப்பேறு மருத்துவர்களே உள்ளனர் என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது இந்திய மகப்பேறு மருத்துவர் கூட்டமைப்பான FOGSI.
பெண் சிசுக்கொலை தடுப்பு மற்றும் நலமான பிரச்சனையற்ற குழந்தைப்பிறப்பை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வை, தமிழகத்தில் ஏற்படுத்த, பல்வேறு கருத்தரங்கு மற்றும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார் இவ்வமைப்பின் தலைவர் மருத்துவர் ஹேமா திவாகர்.
பெண் சிசுக்கொலை தமிழகத்தில், 1 இலட்சத்திற்கு, 97 பேர் என்ற விகிதத்தில், இருப்பதும் FOGSI அமைப்பு வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு மருத்துவ உதவி திட்டங்களால், மகப்பேறு கால இறப்பு விழுக்காடு குறைந்துள்ளபோதிலும், இதை மேலும் குறைத்து, பெண் சிசுக்கொலை இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஆக்குவதே, மகப்பேறு மருத்துவர் கூட்டமைப்பின் நோக்கம் என மேலும் கூறினார் மருத்துவர் ஹேமா திவாகர்.

ஆதாரம் : DINAMALAR








All the contents on this site are copyrighted ©.