2013-08-19 15:56:09

எகிப்தில் அமைதி திரும்ப செபிக்குமாறு மீண்டுமொருமுறை திருத்தந்தை அழைப்பு


ஆக.19,2013. எகிப்தில் அமைதி திரும்ப, தொடர்ந்து செபிக்குமாறு மீண்டுமொருமுறை அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எகிப்தில் அமைதி திரும்ப தொடர்ந்து செபிக்கவும், பிலிப்பைன்ஸ் நாட்டு படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிக்கவும் அழைப்புவிடுத்ததோடு, மக்களோடு இணைந்து தானும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஞாயிறு மூவேளை செப உரையில், ஞாயிற்றுக்கிழமையின் வாசகங்களுக்கு விளக்கமளித்து உரை வழங்கிய திருத்தந்தை, நாம் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை, நல்ல தோற்றத்தை ஏற்படுத்தும் அலங்கார பொருட்களைப் போன்றது அல்ல; மாறாக, அது கடவுளின் குழந்தைகள் என்ற அருள் நிலையை நமக்குக் கொடுக்கின்ற ஆற்றல் என்றும், இந்த அருள் நிலையை இயேசுவில் அவர் வழியாக பெறுகின்றோம் என்றும் கூறினார்.
இயேசுவைப் பின்தொடர்தல் என்பது நன்மை, உண்மை மற்றும் நீதி இவற்றை தேர்ந்தெடுப்பதிலும், சுயநலத்தையும், தீமையையும் கைவிடுவதிலும் அடங்கியிருக்கிறது என்ற திருத்தந்தை,. இது கடவுளை தன் வாழ்க்கையின் அடிப்படையாக ஏற்றுக்கொள்வதிலும், தன்னைத் துறப்பதிலும், தன்னையே கடவுளுக்காகவும், பிறருக்காகவும் அர்ப்பணிப்பதிலும் அடங்கியிருக்கிறது எனவும் கூறி, இதுவே நற்செய்தியில் இயேசு கூறுகின்ற பிளவு என்றும் எடுத்துரைத்தார்.
மேலும் 'வன்முறையை எதிர்க்கின்ற உண்மையும் அன்புமே' கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் உண்மையான ஆற்றல், ஏனென்றால், நம்பிக்கையும் வன்முறையும் எதிர்மறையானவை, ஆனால் நம்பிக்கையும் வலிமையையும் இணைந்துச்செல்பவை, இந்த நம்பிக்கை நம் ஆன்மாவின் ஆற்றல் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.