2013-08-17 16:00:30

மலேசியாவில் 12வது உலகத்தமிழ் இணைய மாநாடு


ஆக.,17,2013. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், 12வது உலகத்தமிழ் இணைய மாநாடு இவ்வியாழனன்று கோலாகலமாகத் துவங்கியது.
இஞ்ஞாயிறுவரை நடைபெறும் இம்மாநாட்டில் 650க்கும் மேலான அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். மலாயாப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள, "பெர்டானாசிஸ்வா' அரங்கத்தில் துவங்கிய இம்மாநாட்டில், "இதுவரை தமிழ் இணையம்' என்ற தலைப்பில் மல்டி மீடியா விளக்கக்காட்சி காண்பிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் பேசிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவரும், இன்பிட் நிறுவனத்தின், கவுரவ ஆலோசகருமான பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன், இந்திய மொழிகளிலேயே, தமிழ் மொழிக்குத்தான் உலக அளவில் இத்தனை மாநாடுகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கென நடைபெற்றுள்ளன. இந்த மாநாட்டுக் கட்டுரைப் புத்தகத்தில் வெளியாகியுள்ள நூறு ஆராய்ச்சிக் கட்டுரைகளும் தரமானவை என்று கூறினார்.
தமிழில், "மெஷின் டிரான்சிலேஷன்' செய்ய வேண்டியது மிகவும் அவசியம் எனவும், அப்போதுதான் விக்கிப்பீடியா போன்ற தகவல் களஞ்சியங்களில் உள்ள பல இலட்சக்கணக்கான ஆங்கிலம் மற்றும் மற்ற மொழிகளில் உள்ள தகவல்கள் தமிழில் வெளிவர இயலும் எனவும், அதற்கு, குறைந்தபட்சம், இரண்டு இலட்சம் வார்த்தைகளாவது தமிழில் சேர்க்கப்பட வேண்டும், அதற்கான பணியை, இளையோர் செய்ய வேண்டும் எனவும் மு.ஆனந்தகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
இம்மாநாட்டுத் துவக்க விழாவின் தலைமை விருந்தினரான, மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது ஷபெரிசீக் பேசியபோது, ""மலேசியாவில் பெரும் பகுதி மக்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும், தாய்மொழிகளில் அவற்றைப் பயன்படுத், முன்னுரிமை அளித்து, அதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை மலேசிய அரசு மேற்கொள்ளும் என்றும் அறிவித்தார்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.