2013-08-17 15:49:08

எகிப்தில் கிறிஸ்தவ ஆலயங்களும் கிறிஸ்தவக் கட்டிடங்களும் மேலும் சேதம்


ஆக.,17,2013. எகிப்தில் இவ்வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து தெருக்களுக்கு வந்து மீண்டும் தாக்குதலை நடத்திய முஸ்லீம் சகோதரத்துவம் என்ற அமைப்பினர் கிறிஸ்தவர்களின் இடங்களைக் குறிவைத்து தாக்கி வருகின்றனர் என ஊடகங்கள் கூறுகின்றன.
எகிப்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட அரசுத்தலைவர் முகமது மோர்சி மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி அவரின் ஆதரவாளர்களான இந்த முஸ்லீம் அமைப்பினருக்கும், இராணுவத்துக்கும் இடையே மோதல்கள் கடுமையாகியுள்ளன.
ஐம்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இரத்த வங்கிக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. 600க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். இவ்வெள்ளி இரவு முதல் Ghamal Al-Fatah மசூதிக்குள் இருக்கும் 700க்கும் மேற்பட்ட முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பினர் அதைவிட்டு வெளியேற மறுத்து வருகின்றனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையே, எகிப்தில் உள்நாட்டுப்போர் நடக்கவில்லை என்றும், ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட வெளிநாட்டுச் சக்திகள் இதில் தலையிட வேண்டாமென்றும் கேட்டுள்ளார் அந்நாட்டின் அலெக்சாந்திரியாவின் காப்டிக் கத்தோலிக்க ஆயர் Youhanna Golta. இவர் எகிப்தின் 2012ம் ஆண்டின் அரசியல் அமைப்பைத் தொகுத்த குழுவில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.