2013-08-17 15:09:05

ஆகஸ்ட் 18, பொதுக்காலம் 20ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 1962ம் ஆண்டு, அக்டோபர் 11ம் தேதி முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைத் துவக்கினார். திருஅவை வரலாற்றின் ஒரு முக்கிய மைல்கல்லான இந்நிகழ்வின் 50ம் ஆண்டு நிறைவினை, நம்பிக்கை ஆண்டு என கொண்டாடி வருகிறோம். கடந்த 50 ஆண்டுகளில் திருஅவை படைத்த வரலாற்றை நம்பிக்கை ஆண்டில் நாம் நினைவுகூர்ந்து வருகிறோம்.
நம் வரலாற்று நினைவுகளில் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு நிகழ்வு... இரண்டாம் வத்திக்கான் சங்கம் நடைபெற்றுவந்த நேரத்தில், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் (1963ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி) வெளியிட்ட 'Pacem in Terris', அதாவது, 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடல். உலக அமைதிக்கு மிகவும் நெருக்கடியை உருவாக்கியச் சூழல் அப்போது நிலவியது. அமெரிக்காவும் இரஷ்யாவும் மூன்றாம் உலகப் போரை துவக்கும் அளவுக்கு உருவான 'க்யூபா ஏவுகணை நெருக்கடி' (Cuban Missile Crisis) என்ற வரலாற்று காலக் கட்டத்தில் இச்சுற்றுமடலை திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் வெளியிட்டார். திரு அவை வரலாற்றில் இந்த மடல் தனியிடம் பெற்றுள்ளது. பொதுவாக, திருத்தந்தையர் எழுதும் திருமடல்கள் கத்தோலிக்கர்களுக்கு மட்டும் என்ற கருத்தைத் தாண்டி, திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் முதல் முறையாக, கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்லாமல், உலகில் நல்மனம் கொண்ட அனைவருக்காகவும் எழுதிய திருமடலாக 'Pacem in Terris' அமைந்தது. இதுவே அவர் வெளியிட்ட இறுதிச் சுற்றுமடல். இம்மடலை வெளியிட்ட இரு மாதங்களுக்குள் அவர் இறையடி சேர்ந்தார்.
திருஅவைக்குள் மாற்றங்களைக் கொணர திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் துவக்கிவைத்த இரண்டாம் வத்திக்கான் சங்கம், அவரது மரணத்திற்குப் பிறகு, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் நிறைவு பெற்றது. ஆனால், உலகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்க, அவர் வெளியிட்ட 'உலகில் அமைதி' என்ற அவரது ஆவலும் கனவும் இன்னும் நிறைவேறாமலேயே உள்ளன.

பதிவுசெய்யப்பட்டுள்ள மனித வரலாறு 5000 ஆண்டுகள் என்று நாம் கணித்தால், அவற்றில், 50 ஆண்டுகள், ஏன்? சொல்லப்போனால், 5 ஆண்டுகள் கூட மனித இனம் முழுமையான அமைதியில் வாழ்ந்திருக்குமா என்பது நிச்சயமில்லை. இரு உலகப் போர்கள், அணுகுண்டு தாக்குதல், வேதிய இராணுவத் தளவாடங்கள் என்ற கொடுமைகளால் இரத்தத்தில் எழுதப்பட்டுள்ள மனித வரலாற்றின் கடந்த நூறு ஆண்டுகளைத் திருப்பிப் பார்க்கும்போது, நம் மத்தியில் அமைதி நிரந்தரமாகக் குடிகொள்ள முடியாது என்ற அவநம்பிக்கை நம் மனங்களில் வேரூன்றுவதை உணர முடிகிறது. அவநம்பிக்கைக்கு ஒருநாளும் மனதில் இடம் தரக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துவரும் அழைப்பிற்குச் செவிமடுத்து, நம் இன்றைய சிந்தனைகளைத் தொடர்வோம்.

அமைதியைப்பற்றி இஞ்ஞாயிறு நாம் சிந்திப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டைக் கொண்டாடுகிறோம் என்பது முதல் காரணம். ஒவ்வோர் ஆண்டும், இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ம் தேதியைத் தொடர்ந்து வரும் ஞாயிறை இந்திய கத்தோலிக்கத் திருஅவை, 'நீதியின் ஞாயிறு' என்று கொண்டாடுகிறது. ஆகஸ்ட் 18, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்படும் நீதி ஞாயிறுக்கென இந்திய ஆயர்கள் பேரவை 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடலின் அடிப்படையில் தேர்ந்துள்ள கருத்து: 'நீதியில் உருவாகும் உலக அமைதி'. இது இரண்டாவது காரணம். 'உலகில் அமைதி' சுற்றுமடலின் 50ம் ஆண்டு நிறைவையும், 'நீதி ஞாயிறையும்' இன்னும் பொருளுள்ளதாக்க இன்றைய ஞாயிறு நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தி மிக முக்கியமான மூன்றாவது காரணம்.

உலகில் ஏன் அமைதியில்லை என்று நாம் எழுப்பும் ஏக்கம் நிறைந்த கேள்விக்கு, நீதியின் வழியாக மட்டுமே அமைதி உருவாகமுடியும் என்று இந்தியத் திருஅவை பதிலிறுக்க முயல்கிறது. இது எவ்வகை அமைதி என்பதைப் புரிந்துகொள்வது பயனளிக்கும். அமைதியின் இளவரசர் என்று நாம் கொண்டாடும் இயேசு இன்றைய நற்செய்தியில் கூறும் வார்த்தைகள் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துகின்றன:
லூக்கா 12: 51
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.
இதுமட்டுமல்ல, இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் இயேசு கூறுவதாக தரப்பட்டுள்ள வரிகளும் அதிர்ச்சி தருவனவாக உள்ளன:
லூக்கா 12: 49
மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

சாந்தம், பொறுமை, தாழ்ச்சி, எளிமை ஆகிய அனைத்து நற்பண்புகளுக்கும் இலக்கணமாக விளங்கும் இயேசுவைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் நமக்குத் தயக்கமில்லை. அமைதி, அன்பு என்ற அற்புதக் கொடைகளின் ஊற்று இயேசுவே என்று உலகறியப் பறைசாற்றவும் நாம் தயங்குவதில்லை. அத்தகைய இயேசு இன்றைய நற்செய்தியில் கூறியுள்ள வெப்பமான வார்த்தைகளை துணிந்து வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம்.
"உலகில் தீ மூட்ட வந்தேன், அமைதியை அல்ல, பிளவை உருவாக்கவே வந்தேன்" என்று இயேசு கூறும் வார்த்தைகள், நம்மைச் சங்கடத்திற்கு உள்ளாகுகின்றன. அதிலும் சிறப்பாக, தான் கொணரும் பிளவுகள் குடும்பத்திற்குள் உருவாகும் என்று இயேசு சொல்வது நம்மை அதிர்ச்சியின் சிகரத்திற்கு அழைத்துச் செல்கின்றது. நமது அதிர்ச்சிகளையும், பதட்டங்களையும் தள்ளிவைத்துவிட்டு, இயேசு தெளிவாக, தீர்க்கமாகக் கூறும் இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

முதலில் இயேசு மூட்டவந்த தீயைப்பற்றி புரிந்துகொள்ள முயல்வோம். தான் வாழ்ந்துவந்த யூத சமுதாயத்தில் நிலவிய அநீதிகளை, அடக்கு முறைகளைக் கண்ட இயேசுவின் உள்ளம் பற்றியெரிந்திருக்க வேண்டும். அதேநேரம், நீதியும் அமைதியும் உலகில் நிலைக்கவேண்டும் என்ற வேட்கையும் அவர் உள்ளத்தில் பற்றியெரிந்திருக்க வேண்டும். நீதியையும், அமைதியையும் நிலைநிறுத்த அவர் உள்ளத்தில் பற்றியெரிந்து கொண்டிருந்த ஆர்வத் தீயை மற்றவர் உள்ளத்தில் மூட்டவே தான் வந்ததாக இயேசு கூறினார்.

தீமூட்டுதல் என்ற மனித செயல்பாட்டினால் ஆக்கப்பூர்வமான விளைவுகளும், அழிவும் உருவாகும் என்பதை உணர்கிறோம். எடுத்துக்காட்டாக, நமது இல்லங்களில் சமையல் அறையில் நாம் தீ மூட்டுவதை எண்ணிப் பார்ப்போம். உணவைத் தயாரிக்க ஒவ்வொரு நாள் காலையிலும் நமது சமையல் அறையில் தீ மூட்டப்படுவது, ஆக்கப்பூர்வமான விளைவைத் தரும். ஆனால், எத்தனையோ இல்லங்களில் அதே சமையல் அறையில் தீ மூட்டப்பட்டு, பெண்கள் பலியாகியுள்ளனர். தற்கொலையாகவோ, கொலையாகவோ பெண்கள் தகனமாக்கப்படுவதற்கு சமையல் அறை தீ ஒரு கருவியாக அமைவது, நமது தலைமுறை கண்டுவரும் கொடிய வேதனை.
குடும்பத்திற்கு உணவு படைக்கவேண்டும் என்ற அன்பினால் மூட்டப்படும் தீ ஆக்கப்பூர்வமான விளைவுகளைத் தரும். புகுந்த வீட்டை நம்பி வந்த பெண்ணைக் கொளுத்துவதற்கு ஆத்திரத்தில், வெறுப்பில் மூட்டப்படும் தீ அழிவாக அமையும். இயேசு இவ்வுலகின் மீது கொண்ட அன்பினால் தீமூட்ட வந்தார். அந்தத் தீயில் தானே தகனமாகவேண்டும் என்பதையும் அவர் இன்றைய நற்செய்தியில் மறைமுகமாகக் கூறியுள்ளார்:
லூக்கா 12: 49-50
மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.
தன்னையேத் தகனப் பலியாக்கும் அளவுக்கு, இயேசு மூட்டும் இந்த நெருப்பில் அநீதி, தீமை, பொய்மை ஆகிய குப்பைகள் எரிந்து சாம்பலாகும். இதே நெருப்பில் நீதி, நன்மை, உண்மை ஆகிய மாணிக்கங்கள் இன்னும் சுத்தமாக்கப்பட்டு, ஒளிரும்.

நெருப்பு மூட்டுதல் ஆக்கத்தையும் அழிவையும் தரும் என்று இருகோணங்களில் சிந்தித்ததுபோல், இயேசு கொணரும் அமைதியையும் இரு கோணங்களில் சிந்திக்க முயல்வோம்.
உலக அரசுகள், மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புக்கள் 'அமைதி' என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது, அவை பெரும்பாலும் குறிப்பிடுவது... போரும், மோதலும் வன்முறைகளும் இல்லாத ஒரு நிலை. இதை நாம் கல்லறை அமைதி என்ற உருவகத்தில் எண்ணிப்பார்க்கலாம். உலகம் தரும் அமைதி, கல்லறையில் காணப்படும் அமைதி. பல நியாயங்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளன. அந்த நியாயங்களுக்குக் குரல் கொடுத்தவர்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளனர். புதையுண்ட நீதிகளையும், நீதிமான்களையும் நாம் மறந்துவிடவேண்டும் என்ற அக்கறையுடன் அங்கு எழுப்பப்படும் கல்லறைகள் மிக அழகான பளிங்கினால் செய்யப்பட்டு, நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. உலக அரசுகள், உலக அமைப்புக்கள் தரும் அமைதி, இத்தகைய கல்லறை அமைதி.

இத்தகைய அமைதியை இயேசு கொணரவில்லை. ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிய மாண்பை, நீதியின் அடிப்படையில் வழங்குவதால் உருவாகும் அமைதியையே அவர் கொணர்ந்தார். இது எத்தகைய அமைதி என்பதை, திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் எழுதிய 'உலகில் அமைதி' சுற்றுமடல் இவ்விதம் கூறுகின்றது:
இறைவனால் நிறுவப்பட்ட ஒழுங்குமுறையைக் கடைபிடிப்பதை உறுதி செய்யாவிடில், யுகங்கள் பலவாய் மனிதர்கள் ஏங்கி வரும், தேடிவரும் உலக அமைதி... ஒருபோதும் நிலவாது. (Pacem in Terris – 1)Peace on Earth—which man throughout the ages has so longed for and sought after—can never be established, never guaranteed, except by the diligent observance of the divinely established order. (Pacem in Terris – 1)ஒவ்வொரு மனிதரின் அடிப்படை மாண்பும், உரிமைகளும் மதிக்கப்படுவதால் மட்டுமே, அமைதியை நிலை நிறுத்தமுடியும். (Pacem in Terris – 9)
Any well-regulated and productive association of men in society demands the acceptance of one fundamental principle: that each individual man is truly a person. His is a nature, that is, endowed with intelligence and free will. As such he has rights and duties, which together flow as a direct consequence from his nature. These rights and duties are universal and inviolable, and therefore altogether inalienable. (Pacem in Terris – 9)

உலகளாவிய அமைதி வானத்திலிருந்து, ஓரிரவில் அல்லது ஒரு நாளில் இறங்கி வரப்போவதில்லை. வானிலிருந்து இறங்கி வந்த இறைமகன், தான் வாழ்ந்த காலத்தில், இத்தகைய அமைதியை அவர் வாழ்ந்த நாட்டிலேயே கொணர முடியவில்லை. ஆனால், உண்மையான அமைதி வளர்வதற்கு விதைகளைப் பயிரிட்டுச் சென்றார். அவர் விதைத்த உண்மையான அமைதி முதலில் நமக்குள் வேர்விட்டு வளரவேண்டும்.
ஒவ்வொரு மனிதருக்கும் உரிய மரியாதையைத் தர நாம் மறுக்கும்போது, அவரவருக்கு உரிய நீதியை, விடுதலையைத் தர நாம் மறுக்கும்போது, முதலில் நம் உள்ளத்தில் அமைதி வேரறுந்து போகிறது; தொலைந்து போகிறது. உள்ளத்தில் அமைதியைத் தொலைத்துவிட்டு, உலகெங்கும் அதைத் தேடுவது வீண் முயற்சி.
நமக்குள் ஊற்றெடுக்கும் உண்மை அமைதி, நம் குடும்பங்களில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவேண்டும். வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரங்களைக் கழுவுவது, துணிகளைத் துவைப்பது என்று நம் இல்லங்களில் எளிய பணிகள் செய்வோரிடம் உண்மையான மதிப்பு, அன்பு, நீதி ஆகியவற்றை நாம் கொண்டுள்ளோமா என்பதை ஆய்வு செய்யலாம். இவர்களுக்கு உரிய நீதி வழங்க நாம் மறக்கும்போது, அல்லது மறுக்கும்போது நம் குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உண்டு. இத்தகைய கருத்து வேறுபாடுகளில் நாம் நீதியான, உண்மையான நிலைப்பாடுகள் எடுக்கவேண்டியிருக்கும். அவ்வேளைகளில் குடும்பத்திற்குள் பிளவுகள் ஏற்படும் சூழலும் உருவாகலாம். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகக் கூறியுள்ளார்:
லூக்கா 12: 52-53
இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.
தந்தை-மகன் சண்டைகள், தாய்-மகள் சண்டைகள் மாமியார்-மருமகள் சண்டைகள், அனைத்து இல்லங்களிலும் உள்ளதுதானே... இதை ஏன் இயேசு பெரிதுபடுத்தவேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால், இயேசு கூறும் பிளவுகள், கருத்து வேறுபாடுகள் ஆத்திரத்தில், உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் எழும் சண்டைகள் அல்ல. மாறாக, மனச்சான்றை மையப்படுத்தி நாம் எடுக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் உருவாகும் பிளவுகள்.

உலகில் நீதி நிலைபெற, அமைதி வேரூன்ற நாள் முழுவதும் நாம் கருத்துக்களை வெளியிடுவது எளிது. அவர்கள் அவ்விதம் செய்ய வேண்டும், இவர்கள் இவ்விதம் செய்ய வேண்டும், அரசுகள் இவற்றைக் கடைபிடிக்கவேண்டும் என்று விதிமுறைகளை அடுத்தவருக்கு வழங்குவது எளிது. ஆனால், அதே கருத்துக்களை நம் தனிப்பட்ட வாழ்வில், குடும்ப வாழ்வில் நடைமுறைப்படுத்த முயலும்போது, பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
நன்னெறி, நற்செய்தி இவற்றின் அடிப்படையில் இந்தப் பிரச்சனைகளில் தகுந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்குப் பதிலாக, குடும்பத்தில் எவ்வகையிலாவது அமைதி நிலவினால் போதும் என்ற எண்ணத்துடன், உண்மைகளை மூடி மறைத்து, பூசிமெழுகி வாழ்வதால் உண்மையான அமைதியை நாம் இழக்கும் ஆபத்து அதிகம் உள்ளது.
இயேசு இவ்வுலகில் மூட்டிய தீ நம் உள்ளத்தில் பற்றியெரியவும், அமைதியை வளர்க்கும் முயற்சிகளை நம் உள்ளங்களிலிருந்து, குடும்பங்களிலிருந்து துவங்கவும் உண்மை அமைதியின் அரசனான இறைவனை இறைஞ்சுவோம்.








All the contents on this site are copyrighted ©.