2013-08-16 15:18:05

பேராயர் ஜிரெல்லி : சமய சுதந்திரம், ஒவ்வொரு நாடும் மதிக்க வேண்டிய உரிமை



ஆக.,16,2013. அடிப்படை மனித உரிமைகளாகிய சமய மற்றும் மனச்சான்றின் சுதந்திரங்கள் ஒவ்வொரு நாடும் மதிக்க வேண்டிய உரிமைகளாகும் என்று வியட்நாமுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி(Leopoldo Girelli) கூறினார்.
சிங்கப்பூர் திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் பேராயர் ஜிரெல்லி இவ்வாரத்தில் வியட்நாமுக்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வியட்நாமில் சிறுபான்மையாக இருக்கும் கத்தோலிக்கரின் விசுவாசத்தைப் பாராட்டினார்.
வியட்நாமில் கத்தோலிக்கர் சிறுபான்மையினராக இருந்தாலும், சமய மற்றும் மனச்சான்றின் உண்மையான சுதந்திரங்களை ஊக்குவிப்பதன் மூலம் அந்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவ முடியும் என்றும் பேராயர் ஜிரெல்லி கூறினார்.
வியட்நாமில் 10 விழுக்காடாக இருக்கும் கத்தோலிக்கர் அந்நாட்டின் கம்யூனிச அதிகாரிகளால் அடிக்கடி அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.