2013-08-16 15:40:09

கைத்தொலைபேசியைக் கொண்டே பார்வைத் திறன் பரிசோதனை


ஆக.,16,2013. கைத்தொலைபேசிகளைக் கொண்டே கண்களைப் பரிசோதித்து பிரச்சனைகளைக் கண்டுபிடிக்க உதவும் புதிய மென்பொருள் ஒன்றை இலண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பார்வைத்திறன் பரிசோதனையைப் பலருக்கும் கொண்டுசேர்க்கும் விதமான கைத்தொலைபேசி பயன்பாடு ஒன்றை London School of Hygiene and Tropical Medicineச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Portable Eye Examination Kit அதாவது PEEK என்று சொல்லப்படுகின்ற பயன்பாடு ஒன்றை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
பார்வைத்திறன் பரிசோதனை கைத்தொலைபேசியில் வருவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்துப் பேசிய, புதுச்சேரி அர்விந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியும், கண் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் ரெங்கராஜ் வெங்கடேஷ், "கைத்தொலைபேசி தொழில்நுட்ப முன்னேற்றத்தால் கண் மருத்துவம் மேம்படும்" என்று கூறினார்.
உலக அளவில் 28 கோடிக்கும் அதிகமானவர்கள் கண்பார்வை பாதிக்கப்பட்டோ அல்லது கண்பார்வையின்றியோ உள்ளனர் என உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது.
பெரும்பாலான கண் கோளாறுகள் எளிதில் குணப்படுத்தக்கூடிய பிரச்சனைகள்தான். பொருத்தமான கண்ணாடியை அணிவதாலோ கண்புரை நீக்க சிகிச்சை மூலமாகவோ அவற்றைக் குணப்படுத்திவிட முடியும்.
உலகில் கண்பார்வை பாதிப்புள்ளவர்களில் 90 விழுக்காட்டினர் ஏழை நாடுகளில் உள்ளனர்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.