2013-08-16 15:16:47

இலங்கையில் கிறிஸ்தவர்கள் நிலை குறித்து திருப்பீடத்தூதர் கவலை


ஆக.,16,2013. உலகின் பல இடங்களில் இடம்பெறுவது போன்று இலங்கையிலும் மதசகிப்பற்ற நிகழ்வுகள் இடம்பெறுவதாக, இலங்கைக்கான திருப்பீடத்தூதர் பேராயர் ஜோசப் ஸ்பித்தேரி (Joseph Spiteri) அவர்கள் மடு அன்னைத் திருவிழாத் திருப்பலியில் கூறினார்.
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க தேசியத் திருத்தலமான மடு அன்னைமரித் திருத்தலத்தில் இவ்வியாழனன்று விழாத் திருப்பலி நிகழ்த்திய பேராயர் ஸ்பித்தேரி, இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்கள் மதசகிப்பற்றதன்மையை எதிர்நோக்குகின்றனர் எனத் தெரிவித்தார்.
மக்களாட்சி மேலோங்கியுள்ள நாடுகளிலும்கூட கிறிஸ்தவர்கள் மதரீதியாக ஒடுக்கப்படுவதாகத் தெரிவித்த பேராயர் ஸ்பித்தேரி, மத சகிப்பற்றதன்மை, மதங்கள் மீதான அடக்குமுறை ஆகியவை, தீய சக்திகள் தலையெடுத்திருப்பதைக் காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.
மடு அன்னையின் வழியைப் பின்பற்றி, சகிப்புத்தன்மையுடன் இத்தகைய தீமைகளில் இருந்து விலகியிருந்து, அடுத்திருப்பவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் திருப்பீடத்தூதர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மரியின் விண்ணேற்பு விழாவான ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஆண்டுதோறும் மடு அன்னைமரி விழா சிறப்பிக்கப்படுகின்றது.
திருப்பீடத்தூதர் பேராயர் ஜோசப் ஸ்பித்தேரி தலைமையில் இவ்வியாழனன்று நடைபெற்ற இவ்விழாத் திருப்பலியை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், அநுராதபுரம் ஆயர் Norbert Andradi ஆகியோரும் சேர்ந்து நிகழ்த்தினர்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.