2013-08-15 16:04:02

பல துறைகளில் சமத்துவம் உருவாக அமெரிக்க ஐக்கிய நாடு தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியுள்ளது - அமெரிக்க ஆயர்கள்


ஆக.15,2013. குடியுரிமைகளைக் கோரி, மேற்கொள்ளப்பட்ட பேரணி, கடந்த 50 ஆண்டுகளில் பல நன்மைகளை வழங்கியிருந்தாலும், இன்னும் பல துறைகளில் சமத்துவம் உருவாக அமெரிக்க ஐக்கிய நாடு தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியுள்ளது என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், குடியுரிமைகளைக் கோரி, 1963ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பேரணியின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, அமெரிக்க ஆயர்கள் பேரவையின் சார்பில் செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
1979ம் ஆண்டு மற்றும் 1984ம் ஆண்டு அமெரிக்க ஆயர்கள் வெளியிட்ட மேய்ப்புப்பணி சுற்றுமடல்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மீண்டும் நினைவுறுத்தும் இச்செய்தி, இனபாகுபாடுகளை ஒழிக்கும் வகையில் நீதியை நிலைநாட்டுவது, புதுவழி நற்செய்தி பரப்பும் பணியின் முக்கிய அம்சம் என்பதை வலியுறுத்தியுள்ளது.
வறுமையை ஒழித்தல், வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல், இனபாகுபாடுகளை நீக்குதல், அனைவருக்கும் சரிநிகரான உரிமைகள் வழங்குதல் ஆகிய சவால்களை அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சந்திக்கவேண்டும் என்று, இச்செய்தியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.