2013-08-15 15:56:27

ஆக.16,2013 கற்றனைத்தூறும்.... சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி


சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி, இந்தியாவின் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும். காவிரிக் கரையோரம் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளில் இது மிகவும் வியக்க வைக்கும் நீர்வீழ்ச்சியாகும். பல மேடு பள்ளங்களைத் தாண்டி ஆறாக ஓடி வந்து, பாறைகளின் இடுக்கில் சிக்காமல், நீர்வீழ்ச்சியாகக் கொட்டும்போது அதன் அழகே அழகுதான். சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சியின் அகலம் 305 மீட்டர். இதன் உயரம் 98 மீட்டர். இங்கு சாதாரணமாக விழும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 934 கன அடியாகும். இங்கு மழைக் காலங்களில் வினாடிக்கு 18,887 கன அடி நீர்கூட கொட்டுவது வழக்கம். இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது ஆண்டு முழுவதும் கொட்டும் வற்றாத நீர்வீழ்ச்சி என்பதே. இங்குச் செல்ல ஏற்ற காலம் ஜூலை முதல் அக்டோபர் வரை. காவிரி நதி, இப்பகுதியை அடைவதற்கு முன்பே இரண்டு கிளைகளாகப் பிரிந்து விடுவதால், இங்கு இரண்டு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஒன்று ககனாசுக்கி, மற்றொன்று பரசுக்கி. சிவன்சமுத்ராவில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரத்தின்மீது ஏறிப் பார்த்தால் ககனசுக்கியின் அழகான தோற்றத்தை முழுவதுமாகக் கண்டு இரசிக்கலாம். சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி பெங்களூருவில் இருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பெங்களூருவில் இருந்து கனகபுரா, மலவள்ளி வழியாக சிவன்சமுத்ராவை அடையலாம். இங்கு எப்போதுமே நீர் வற்றாது என்பதால், ஏப்ரல், மே மாதத்திலும் பயணிகள் இங்கு ஏராளமானோர் குவிகின்றனர்.

ஆதாரம் : தினமணி








All the contents on this site are copyrighted ©.