2013-08-15 15:57:09

Castel Gandolfoவில் திருத்தந்தை பிரான்சிஸ்


ஆக.15,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் மறைகல்வி உரைகள் அனைத்திலும் நம்பிக்கையும், விடுதலையும் இழையோடுவதைக் காண்பது தங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்துகிறது என்று Castel Gandolfoவில் அமைத்துள்ள புனித தோமா வில்லனோவா பங்கின் அருள் பணியாளரான Pietro Diletti அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Castel Gandolfoவில் இவ்வியாழனன்று திருப்பலி நிறைவேற்றச் சென்றிருந்தபோது, பங்கு மக்களின் சார்பாக, திருத்தந்தையை வரவேற்று உரையாற்றிய அருள் பணியாளர் Diletti அவர்கள், இளையோர் மீது திருத்தந்தை அவர்கள் கொண்டிருக்கும் ஆர்வமும் நம்பிக்கையும் பெரும் நம்பிக்கையை அளிக்கின்றன என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை 9 மணி அளவில் வத்திக்கானை விட்டு காரில் புறப்பட்டுச் சென்றார். 9.30 மணியளவில் Castel Gandolfoவை அடைந்த திருத்தந்தை, அங்குள்ள வறியோரின் கிளாரா தவ இல்லத்திற்கு முதலில் சென்று அங்கு வாழும் அருள் சகோதரிகளுடன் 45 நிமிடங்கள் உரையாடினார்.
10.30 மணிக்கு Castel Gandolfoவின் விடுதலை வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியை நிறைவேற்றியபின், கூடியிருந்தோருக்கு மூவேளை செப உரையையும் வழங்கினார்.
Castel Gandolfoவில் மதிய உணவு அருந்தியபின், புனித தோமா வில்லனோவா பங்கினை தனிப்பட்ட முறையில் பார்வையிட்டார். மதியம் 2 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் வத்திக்கான் திரும்பினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.