2013-08-14 17:17:06

மணிலாவில் "நம்பிக்கைத் திருவிழா" கொண்டாடப்படும் - கர்தினால் Tagle


ஆக.14,2013. நம்பிக்கை வாழ்வு ஏனைய ஆசிய நாடுகளில் எவ்விதம் வாழப்படுகிறது என்பதை பிலிப்பின்ஸ் நாட்டில் வாழும் மக்கள் கேட்பது மிகுந்த பலனைத் தரும் என்று மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் கூறினார்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக, வருகிற அக்டோபர் 16ம் தேதி முதல் 18ம் தேதி முடிய மணிலாவில் "நம்பிக்கைத் திருவிழா" கொண்டாடப்படும் என்று அறிவித்த கர்தினால் Tagle அவர்கள், இத்திருவிழாவில் கலந்து கொள்ள ஆசிய நாடுகளின் அனைத்து ஆயர்களையும் தான் அழைத்துள்ளதாகவும் கூறினார்.
கத்தோலிக்கர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பிலிப்பின்ஸ் நாட்டு மக்கள், மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக கத்தோலிக்கர்களைக் கொண்டுள்ள நாடுகளில் வாழ்வோர் தங்கள் நம்பிக்கையை எவ்விதம் வாழ்கின்றனர் என்பதை அறிந்துகொள்வது பயனளிக்கும் என்று கர்தினால் Tagle அவர்கள் கூறினார்.
மணிலாவின் புனித தோமா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில் 6000க்கும் அதிகமானோர் கலந்துகொள்வர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம்: UCAN








All the contents on this site are copyrighted ©.