2013-08-14 17:17:17

சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை என்று எண்ணுவது தவறு - அமெரிக்க ஆயர் Stephen Blaire


ஆக.14,2013. சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை என்று எண்ணுவது தவறு என்று அமெரிக்க ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்ற பணிக்குழுவின் தலைவர் ஆயர் Stephen Blaire அவர்கள் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள் கிழமை உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு, செப்டம்பர் 2ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் உழைப்பாளர் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஆயர் Blaire அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளைச் சீரமைக்கும் மனம் அனைவருக்கும் தேவை என்று கூறியுள்ளார்.
சுய மரியாதையை உறுதிப்படுத்தும் உழைப்பும், அதற்குரிய ஊதியமும் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றுக்களிலிருந்து எடுத்துரைக்கும் ஆயர் Blaire அவர்களின் செய்தி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் வளர்ந்துவரும் ஏழை செல்வந்தர் இடைவெளியை மையமாக்கி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது நிலவும் பொருளாதாரச் சரிவினால், 4 கோடியே, 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் தகுந்த வேலைகள் இன்றி வறுமையில் வாழ்வதாகவும், இவர்களில் 1 கோடியே, 60 இலட்சம் பேர் குழந்தைகள் என்றும் ஆயர் Blaire அவர்களின் செய்தி கூறுகிறது.

ஆதாரம்: Zenit








All the contents on this site are copyrighted ©.