2013-08-13 15:58:05

பிலிப்பீன்ஸ் ஆயர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனையில் கவனம், சேரிவாழ் மக்களுக்கு ஆதரவு


ஆக.,13,2013. சேரிகளில் வாழும் ஏழை மக்களைச் சந்தித்து அவர்களுடன் அதிகநேரம் செலவழிக்க வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்திருக்கும் வேண்டுகோளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.
பிலிப்பீன்சின் Deogracias Iniguez, Elmer Bolocon, Artemio Luwaton ஆகிய ஆயர்கள் உட்பட பல சமயத் தலைவர்கள், Quezon நகரின் கால்வாய்களில் வாழும் சேரி மக்களை இச்செவ்வாயன்று சந்தித்தனர்.
ஏழைச்சேரி மக்கள் வாழும் குடியிருப்புக்கள் தகர்க்கப்பட்டுவரும் தற்போதைய அரசின் நடவடிக்கைகள், மனிதமற்ற, நேர்மையற்ற, நியாயமற்ற மற்றும் அடக்குமுறைச் செயல்கள் என்று ஆயர்கள் குறைகூறியுள்ளனர்.
அத்துடன், சேரிகள் தகர்க்கப்படுவது நிறுத்தப்படுமாறும் விண்ணப்பித்துள்ள ஆயர்கள், கால்வாய்ப் பகுதிகளில் வாழும் மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளை நிறுத்தி, அம்மக்கள் எதிர்நோக்கவிருக்கும் பேரிடர்களைக் களைவதற்கு ஆவன செய்யுமாறும் கேட்டுள்ளனர்.
பிலிப்பீன்சில் ஏறக்குறைய 2 கோடிப் பேர் நகர்ப்புற ஏழைகள் என்று ஐ.நா. கணக்கிட்டுள்ளது.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.