2013-08-13 15:48:29

திருத்தந்தை பிரான்சிஸ் கால்பந்து விளையாட்டு வீரர்களிடம் : மனிதத்தின் எடுத்துக்காட்டுகளாய்த் திகழுங்கள்


ஆக.,13,2013. விளையாட்டு கடவுளின் கொடை என்பதால், விளையாட்டு வீரர்கள் மனிதத்தின் எடுத்துக்காட்டுகளாய்த் திகழவேண்டுமென்று இத்தாலி மற்றும் அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு வீரர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புதனன்று உரோமையில் நடைபெறவிருக்கும் இத்தாலி மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் தேசிய கால்பந்து விளையாட்டு வீரர்கள் அணிகளுக்கிடையேயான நட்புரீதியிலான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வந்திருக்கும் விளையாட்டு வீரர்களை வத்திக்கானின் Clementine அறையில் இச்செவ்வாயன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
இக்காலத்தில் விளையாட்டு பெரிய வணிகமாக மாறிவருவது குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை, விளையாட்டு வீரர்கள் விளையாடும்போது மைதானத்தில் அழகையும், நன்றியையும், தோழமையையும் காண்பதாகவும், அவ்விடத்தில் தன்னலப்போக்குக்கு இடமில்லை மாறாக, அணியின் ஒத்துழைப்புக்கே இடமுண்டு எனவும் கூறினார்.
தனது பாப்பிறைப் பணிக்காகச் செபிக்குமாறும், இதன்மூலம் கடவுள் தன்னை வைத்துள்ள விளையாட்டுத் தளத்தில் நேர்மையோடும் துணிச்சலோடும் விளையாட முடியும் என்றும், இச்செவ்வாயன்று தான் சந்தித்த விளையாட்டு அணிகளின் ஏறக்குறைய 200 பேரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலி மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் தேசிய கால்பந்து அணிகள் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்புதனன்று உரோம் ஒலிம்பிக் மைதானத்தில் விளையாடவுள்ளன. இதனை இவ்வணிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கால்பந்து விளையாட்டுப் பிரியர் என்பதும், Buenos Aires de Almagro கால்பந்து அணியின் இரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.