2013-08-13 15:54:30

தனது சகோதரரின் கொலை குறித்து வருந்தும் இத்தாலியர் ஒருவருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஆறுதல்


ஆக.,13,2013. தனது சகோதரர் கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டதையடுத்து கடவுளை மன்னிக்க மறுத்துவந்த இத்தாலியர் ஒருவரைத் தொலைபேசியில் அழைத்து நம்பிக்கை நிறைந்த ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் பேசரோ நகரில் பல எரிவாயு நிறுவனங்களை நடத்திவரும் Andrea என்பவர் கடந்த ஜூன் மாதத்தில் இரு பணியாளர்களால் கொலைசெய்யப்பட்டதால் கடவுளிடம் மிகுந்த கோபமாக இருக்கும் அவரின் சகோதரர் Michele Ferri என்பவரை கடந்த புதன்கிழமை நண்பகலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.
இத்தொலைபேசி அழைப்பு குறித்து Il Messagero என்ற இத்தாலிய நாளிதழுக்குப் பேட்டி கொடுத்துள்ள Michele Ferri, வேதனை மற்றும் மனச்சோர்வு அதிகமானதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கடிதம் ஒன்றைத் தான் எழுதியதாகவும், ஆனால், அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெறுவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை எனவும் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து வந்த எதிர்பாராத தொலைபேசி அழைப்பு, தனது வாழ்வில் மறக்கமுடியாத உணர்வுகளைத் தந்துள்ளது என Michele Ferri மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கடவுளே உம்மை நான் எப்பொழுதும் மன்னித்து வந்துள்ளேன், ஆனால், இம்முறை உம்மை மன்னிக்கவே முடியாது என, தனது சகோதரர் கொலைசெய்யப்பட்டதற்குப் பின்னர் Michele Ferri தனது முகநூலில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.