2013-08-12 16:37:11

திருத்தந்தை பிரான்சிஸ் : மனித வாழ்வு தாயின் கருவிலிருந்து எப்பொழுதும் பாதுகாக்கப்பட வேண்டும்


ஆக.12.2013. கிறிஸ்தவ விசுவாசத்தைக் கற்றுக்கொடுப்பதிலும், பரப்புவதிலும் இறைவனின் உடனுழைப்பாளர்களில் பெற்றோர்கள் முதன்மையானவர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரேசில் நாட்டில் கொண்டாடப்படும் குடும்ப வார விழாவுக்கான தன் வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.
மனித வாழ்வும், மனித அன்பும் இறைவெளிபாட்டின் மூலமாகப் புதுப்பொலிவு பெறுகின்றன என்ற அடிப்படை உண்மையை, பெற்றோர் தங்கள் வார்த்தைகள் மூலமாகவும், அதைவிட தங்களின் செயல்கள் மூலமாகத் தங்கள் குழந்தைகளுக்கு விளக்கவேண்டும் எனவும் திருத்தந்தை அச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
தேவையில்லாதவை வீண் என்று ஒதுக்குகின்ற இக்காலத்தில், மனித வாழ்க்கையின் மதிப்பை புறந்தள்ளும் கலாச்சாரத்தில், மனிதவாழ்க்கை கடவுளின் கொடை, அது மனித குலத்தின் எதிர்காலம், எனவே ஒவ்வொரு மனித உயிரும் தாயின் கருப்பையிலிருந்தே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
சமுதாயத்தின் கடந்தகாலத்தின் நினைவுகளாகவும், வாழ்க்கை ஞானத்தைக் கற்றுகொடுக்கும் வயது முதிர்ந்தவர்களை, குறிப்பாக, நம் தாத்தா பாட்டிகளை பராமரிப்பதிலும் அக்கறை கொள்ளவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இஞ்ஞாயிறு முதல் வருகிற சனிக்கிழமை வரையுள்ள நாள்களை, தேசிய குடும்ப வாரமாக அறிவித்துள்ளது பிரேசில் நாட்டு ஆயர் பேரவை. "இல்லங்களில் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புதலும், கற்றுக்கொடுத்தலும்' என்பதை இவ்வாரம் தலைப்பாகக் கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.