2013-08-12 14:55:50

கற்றனைத்தூறும்..... தேன்சிட்டுகள்


Hummingbirds அதாவது தேன்சிட்டுகள், ஓசனிச்சிட்டுகள் என்றெல்லாம் அழைக்கப்படும் பறவைகள் Trochilidae பறவை இனக் குடும்பத்தைச் சேர்ந்தவை. பறவையினங்களில் மிகச் சிறியவைகளாக இருக்கும் இப்பறவைகள் வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இப்பேரினத்திலுள்ள 340 வகைகளில் 130க்கும் அதிகமானவை ஈக்குவதோர் நாட்டில் உள்ளன. பொதுவாக இப்பறவையினங்கள், 7.5 செ.மீ. முதல் 13 செ.மீ வரை நீளமுடையவை. இவற்றில் மிகச் சிறியவை தேனி தேன்சிட்டுகளாகும். 5 செ.மீ. நீளமும், 1.8 கிராம் எடையையும் கொண்ட இப்பறவைகள் கியூபா நாட்டில் காணப்படுகின்றன. தேன்சிட்டுப் பறவைகளுக்கு இருக்கின்ற சிறப்பம்சம் என்னவெனில், இவை உயரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை. இவற்றின் இறக்கைகள் நொடிக்கு 12 முதல் 80 தடவைகள் மிக மிக வேகமாக அடிக்கின்றன. அப்போது இவை எழுப்பும் "உசுஉசு, பொம்மென்ற" ஒலியால் இப்பறவைகள் Hummingbirds என்று அழைக்கப்படுகின்றன. அந்தரத்தில் ஓரிடத்திலேயே பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல், இவை பறந்துகொண்டே பின்னோக்கியும் நகரவல்லது. நீளவாக்கிலும், நேர்செங்குத்தாகவும், மேலெழுந்தும் பறக்கும் சக்தியையும் இவை கொண்டுள்ளன. இப்பறவைகளின் உணவில், பூக்களின் தேனும் சிறு பூச்சிகளும் முக்கியமானவை. இவை பூச்சிகளை உண்பதால், இவற்றின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்தைப் பெறுகின்றன. தேன்சிட்டுகள் தம் இறக்கைகளைக் கீழ்நோக்கி அடிக்கும்பொழுது 75 விழுக்காடு தன் உடலைத்தாங்கும் திறனும், மேல்நோக்கி இறக்கைகளை அடிக்கும்பொழுது 25 விழுக்காடு தாங்கும் திறனும் கொண்டுள்ளதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆதாரம் : விக்கிப்பீடியா







All the contents on this site are copyrighted ©.